அவதூறு கருத்துகளை வெளியிட ரவிமோகன், ஆர்த்திக்கு உயர்நீதிமன்றம் தடை

தங்களுக்கு இடையேயான பிரச்சனை குறித்து ரவிமோகன், ஆர்த்தி இருவரும் இனி எந்த அறிக்கையும் விடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
சென்னை,
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தன் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் ரவி மோகன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இருவரும் கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சமரச தீர்வு மையத்திற்கு வழக்கை அனுப்பி வைக்கப்பட்டது. சமரச மையத்தில் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது அவர்களுக்குள் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், இந்த வழக்கு மீண்டும் குடும்ப நல கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விவாகரத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராக, நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் தனித்தனியாக கார்களில் வந்து கோர்ட்டில் ஆஜராகினர். ஆர்த்தி தன் தந்தையுடன் கோர்ட்டில் ஆஜராகினார். அப்போது தனக்கு ஆர்த்தியிடம் இருந்து விவகாரத்து வேண்டும் என்பதற்கான விளக்கத்துடன் நடிகர் ரவி மோகன் மனு தாக்கல் செய்தார்.
அதைபோல ஆர்த்தி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனக்கும் தன் இரு மகன்களுக்கு ஜீவனாம்சம் வழங்க ரவி மோகனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுக்கு பதில் அளிக்கும்படி ரவி மோகனுக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதத்திற்கு தள்ளிவைத்தார்.
தன்னைப்பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்தி மற்றும் அவரது தாய்க்கு தடைவிதிக்கக்கோரி, ரவிமோகன் தரப்பிலிருந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், ரவிமோகன் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
தங்களுக்கு இடையேயான பிரச்சனை குறித்து ரவிமோகன், ஆர்த்தி இருவரும் சமூக வலைதளங்களில் இனி எந்த அறிக்கையும் விடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ரவி மோகன், ஆர்த்தி குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இரு தரப்பினரும் பரஸ்பரம் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்றும், இருவரும் ஏற்கனவே பதிவு செய்த பதிவுகளை நீக்கி விடுவதாகவும் தெரிவித்தனர்.