அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது- மனம் திறந்த பார்க்கிங் பட இயக்குநர்

இயக்குநர் ராம்குமார் இயக்கிய பார்க்கிங் திரைப்படம் 3 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.
கடந்த 1954-ம் ஆண்டில் இருந்து இந்திய திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், 2023-ம் ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட படங்களுக்கான 71-வது திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் சிறந்த படமாக '12-த் பெயில்' என்ற இந்திப்படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் ஷாருக்கானுக்கு 'ஜவான்' என்ற இந்திப்படத்துக்காகவும், விக்ராந்த் மாசேவுக்கு 12-த் பெயில் படத்துக்காகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில் சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் ஆகிய 3 பிரிவுகளில் இயக்குநர் ராம்குமார் இயக்கிய பார்க்கிங் திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது.
'பார்க்கிங்' படத்தில் நடித்ததின் மூலம் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ள எம்.எஸ்.பாஸ்கர் குறித்து இயக்குனர் ராம்குமார் கூறியதாவது, "எம்.எஸ்.பாஸ்கர் சார்தான் இந்த விருதை பெற சரியானவர். அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் எனக்கு முன்பிருந்தே இருந்தது. இந்தப் படத்தில் அது கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோசம்" என்று தேசிய விருது வென்ற எம்.எஸ்.பாஸ்கர் குறித்து மனம் திறந்து இயக்குநர் ராம்குமார் பேசியுள்ளார்.