மகா கலைஞனே விரைவில் மீண்டு வா.... பாரதிராஜா உடல்நிலை குறித்து வைரமுத்து பதிவு


மகா கலைஞனே விரைவில் மீண்டு வா.... பாரதிராஜா உடல்நிலை குறித்து வைரமுத்து பதிவு
x

கருவேலங்காட்டுக் கரிச்சான்களும் அவர் நலம் கேட்குமே என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். பாரதிராஜா தற்போது நலமாக உள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பாரதிராஜா உடல்நிலை குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலம் தேறிவருகிறார். நோய்த் தொற்றிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறார். உடைந்த சொற்களாயினும் உரக்கப்பேச ஆசைப்படுகிறார். ஓர் உயிர் துடிக்கும் உடல்மொழியைப் பார்த்தேன்.

என் வலக்கரத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டார். அந்தப் ஸ்பரிசத்தில் எத்துணை செய்திகள்! எத்துணை உணர்வுகள். 45 ஆண்டு காலக் கலைச் சரித்திரம் எங்கள் உள்ளங் கைகளுக்கிடையே நசுங்கியது. நான் மட்டுமா?. கருவேலங்காட்டுக் கரிச்சான்களும் அவர் நலம் கேட்குமே.

எங்கள் கிராமத்துச் சூரிய காந்திப் பூக்களும் அவர் சுகம் கேட்குமே! வைகை அலைகள் வா வா சொல்லுமே! மகா கலைஞனே! விரைவில் மீண்டு வா. ‘என் இனிய தமிழ் மக்களே’என்ற உன் கரகரப்பான காட்டுக் குரலுக்காக ‘ஆஸ்பத்திரி’க்கு வெளியே அலைபாய்கிறது காற்று. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story