தங்கம் கடத்திய வழக்கு: நடிகை ரன்யா ராவ் தாயின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

துபாயில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் நடிகை ரன்யா ராவின் தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
துபாயில் இருந்து கடந்த மார்ச் மாதம் தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. விசாரணைக்கு பின்பு நடிகை ரன்யா ராவ் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரது காதலன் தருண் என்பவர் உள்பட மேலும் சிலர் இவ்வழக்கில் கைதாகி சிறைவாசம் அனுபவிக்கிறார்கள்.
இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். அதில், துபாயில் இருந்து சட்டவிரோதமாக 127 கிலோ தங்கத்தை ரன்யா ராவ் கடத்தி வந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ரு.102 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தங்கம் கடத்தல் வழக்கில் தனது மகள் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரியும், அவரது கைது சட்டவிரோதமானது என்பதால், அதற்கு தடை விதிக்கும்படியும், ரன்யா ராவின் தாய் ரோகினி மற்றும் தருணின் தாய் ரமா ராஜு ஆகியோர் கர்நாடக ஐகோர்ட்டில் கேபியஸ் கார்பஸ்(ஆட்கொணர்வு) மனுக்கள் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் அனு சிவகுமார் மற்றும் விஜய்குமார் ஏ.பட்டீல் முன்னிலையில் நடைபெற்று வந்தது.
அப்போது ரன்யா ராவ் தரப்பில் ஆஜரான வக்கீல், ரன்யா ராவ் கைது விவகாரத்தில் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சட்ட விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை. விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது மனுதாரர் வீடியோ எடுத்ததையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அவரது பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே மனுதாரர் மீது பதிவான வழக்கை ரத்து செய்வதுடன், அவரது கைதுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
அதுபோல், தருண் தாய் தரப்பில் ஆஜரான வக்கீலும் வாதிட்டார். பின்னர் மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், ரன்யா ராவுக்கு வீடியோ காட்சிகள் அடங்கிய பென் டிரைவை வழங்க வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர் தங்கம் கடத்தியது ஆதாரத்துடன் நிரூபணமாகி இருப்பதால், வழக்கை ரத்து செய்ய கூடாது. மேலும் அவர்க மீது ‘காபிபோசா’ சட்டம் அமலில் இருப்பதால், ஜாமீன் கிடைத்தாலும் அவர்களால் ஒரு ஆண்டுக்கு சிறையில் இருந்து வெளியே வர முடியாது. அதனால் இந்த ஆட்கொணர்வு மனுக்களை ரத்து செய்ய வேண்டும்’ என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ரன்யா ராவ், தருண் ஆகியோரின் ஆட்கொணர்வு மனுக்களை தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.






