நடிகை நேஹா சர்மாவிடம் அமலாக்கத்துறை விசாரணை

ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்புடைய பணமோசடி வழக்கில் நடிகை நேஹா சர்மாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்
புதுடெல்லி,
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நேஹா சர்மா. இவர் 2007 ம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான "சிருதா"படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் "குரூக்" திரைப்படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த 'ஜுங்கா' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்ட செயலிக்கு தடை விதித்து மத்திய அரசு சட்டம் இயற்றியது. ஆன்லைன் சூதாட்ட செயலியான ‘ஒன் எக்ஸ் பெட்’ என்ற நிறுவனத்தை விளம்பரப்படுத்திய விவகாரத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரை அமலாக்கத்துறையினர் விசாரணை செய்ததையடுத்து அவர்களிடமிருந்து ரூ.11.14 கோடி மதிப்புள்ள சொத்துகளை மத்திய புலனாய்வு நிறுவனம் பறிமுதல் செய்தது.
மேலும், சம்பந்தப்பட்ட சூதாட்ட நிறுவன விளம்பரத்தை பிரபலப்படுத்திய விவகாரத்தில் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா, நடிகர்கள் சோனு சூட், ஊர்வசி ரவுடேலா, முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.மிமி சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை வளையத்துக்கு வந்தனர்.
இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்புடைய பணமோசடி வழக்கில் விசாரணைக்காக நடிகை நேஹா சர்மா அமலாக்க இயக்குநரகத்தில் நேற்று ஆஜரானார். அப்போது 38 வயதான நடிகை நேஹா சர்மாவிடம் ஆன்லைன் சூதாட்ட செயலி நிறுவனத்துடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? சூதாட்ட நிறுவனத்துடன் இணைந்து ஏதேனும் பண மோசடியில் ஈடுபட்டாரா? என பல கிடுக்கிப்பிடி கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுப்பினர்.






