ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? - 'குட் பேட் அக்லி' விமர்சனம்


ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? - குட் பேட் அக்லி  விமர்சனம்
x
தினத்தந்தி 10 April 2025 1:46 PM IST (Updated: 10 April 2025 1:54 PM IST)
t-max-icont-min-icon

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் இன்று வெளியாகி உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தநிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'குட் பேட் அக்லி' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ் தனது எக்ஸ் தளத்தில் அஜித்துடன் நடித்தது குறித்தும் அவருடன் மீண்டும் பணியை குறித்தும் பதிவிட்டுள்ளார். அதில், "இன்னும் சில மணிநேரங்கள் தான் இருக்கிறது. எனக்கு பதட்டமாக, உற்சாகமாக, ஆர்வமாக இருக்கிறது. நான் அஜித் சாரின் படங்களுக்கு மார்கெட்டிங் மற்றும் புரமோஷன் செய்தபோது, அவருடன் இணைந்து நடிப்பேன் என்று நினைக்கவே இல்லை. ஆனால், பல வருடங்களுக்கு பின்னர் அது நடந்துள்ளது.

மும்பையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் ஆக இருக்கும் அஜித்குமார், திருமணத்துக்கு பிறகும் தனது நடவடிக்கையை மாற்றிக் கொள்ளாமல் 'டான்' ஆக சுற்றுகிறார். ஒரு கட்டத்தில் மனைவி திரிஷா கேட்டுக்கொள்ள, பிறந்த தனது குழந்தை மீது சத்தியம் செய்து எல்லாவற்றையும் விட்டு சிறைக்கு செல்கிறார்.

அஜித்குமார் சிறையில் இருப்பது தெரியாமல் மகனை வளர்க்கிறார் திரிஷா. 17 வருடங்களுக்கு பிறகு மகனை பார்ப்பதற்காக சிறையில் இருந்து வெளியே வரும் அஜித் குமார், தனது மகன் போதை வழக்கில் சிக்கி சிறைக்குச் செல்வது கண்டு அதிர்ச்சி அடைந்து போகிறார்.

தனது விரோதிகள் இதற்கு காரணமா? என்ற வேட்டையில் களமிறங்கும் அஜித்குமார், இதன் பின்னணியில் அர்ஜுன் தாஸ் இருப்பதை கண்டு பிடிக்கிறார். அதேவேளை அஜித்குமாரை தீர்த்துக்கட்ட பழைய விரோதிகளும் ஒன்று சேர்கிறார்கள்.

அஜித்குமார் தனது மகனை காப்பாற்றினாரா? மீண்டும் கேங்ஸ்டர் பாதைக்கு திரும்பினாரா? இதன் பின்னணியில் உள்ள மர்மம் தான் என்ன என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது பரபரப்பான மீதி கதை.

'ஒன் மேன் ஆர்மி'யாக படம் முழுவதையும் தோளில் சுமந்து அமர்க்கள படுத்தியுள்ளார் அஜித்குமார். கோட்சூட் அணிந்து நடக்கும் காட்சிகளில் ஆரவாரம். இளமை தோற்றங்களில் வரும் போதெல்லாம் அரங்கம் அதிர்கிறது. 'பஞ்ச்' வசனங்களுக்கும் பஞ்சம் வைக்கவில்லை.

அழகான குடும்பத் தலைவியாக வந்து போகிறார் திரிஷா. நடிப்பில் முதிர்ச்சி காட்டி ரசிக்க வைத்துள்ளார். அஜித் குமார் மகனாக வரும் கார்த்திகேயா தேவின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது. அர்ஜுன் தாசின் வில்லத்தனமான நடிப்பு மிரட்டல். கரகரப்பான குரலால் பயமுறுத்துகிறார். அவரது பின்னணி சுவாரசியம்.

ஜாக்கி ஷெராப், பிரியா வாரியர், பிரபு, பிரசன்னா, ராகுல் தேவ், பி.எஸ்.அவினாஷ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நிறைவை சேர்த்துள்ளனர். ரெடின் கிங்ஸ்லியின் டைமிங் காமெடிக்கு கைதட்டலாம். ஆக்சன் காட்சிகளில் 360 டிகிரியில் கேமராவை சுழற்றி ஆச்சரியம் தருகிறார். ஜி.வி.பிரகாசின் இசை ஆர்ப்பரிக்கிறது. பாடல்கள் 'தெறி' ரகம். சிம்ரனின் 'என்ட்ரி' ஆட்டம் போட வைக்கிறது. 'வாலி' பட பாணியில் அஜித்குமார் - சிம்ரன் பேசிக்கொள்ளும் காட்சிகள் அழகான கொஞ்சல்கள்.

சிறையில் ரவுடிகள் ஆட்டம் போடுவது போன்ற லாஜிக் மீறல்கள் இருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதை அதை மறக்கடித்து விடுகிறது. சீரியசான இடங்களில் வரும் டார்க் காமெடிகளை தவிர்த்து இருக்கலாம். அஜித்குமார் என்ற கூர்மையான ஆயுதத்தை சரியாக பட்டைதீட்டி, அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் திரைக்கதை அமைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

1 More update

Next Story