மறைந்த டேனியல் பாலாஜி நடித்த “பிபி 180” டிரெய்லர் வெளியானது
மறைந்த டேனியல் பாலாஜி, தன்யா ரவிச்சந்திரன் நடித்த ‘பிபி 180’ படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது.
சென்னை,
சித்தி சீரியலில் அறிமுகமான டேனியல் பாலாஜி சுந்தர் கே விஜயன் இயக்கத்தில் உருவான 'அலைகள்' என்ற படத்தில் நடிகரானார். இந்த படத்தில் தான் அவருக்கு டேனியல் பாலாஜி என்ற பெயர் வைக்கப்பட்டது. அதன் பின்னர் 'ஏப்ரல் மாதத்தில்' 'காதல் கொண்டேன்' போன்ற படங்களில் நடித்த டேனியல் பாலாஜி சூர்யாவுடன் 'காக்க காக்க' படத்திலும் கமலஹாசன் உடன் 'வேட்டையாடு விளையாடு' படத்தில் நடித்திருந்தார். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவரது நெருங்கிய நண்பரான டேனியல் பாலாஜி அவர்களுடன் 'பொல்லாதவன்' 'வடசென்னை' போன்ற படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் உடன் 'பைரவா' மற்றும் 'பிகில்' படத்தில் நடித்த டேனியல் பாலாஜி அஜித்துடன் 'என்னை அறிந்தால்' படத்திலும் நடித்தார்.தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும் வில்லன் நடிகராகவும் பல படங்களில் நடித்து புகழ்பெற்று விளங்கிய டேனியல் பாலாஜி கடந்த ஆண்டு மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக இயறகை எய்தினார்.
இறப்பதற்கு முன்னர் டேனியல் பாலாஜி சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அப்படி அவர் நடித்து முடித்த படங்களில் ஒன்றான "பிபி 180" படத்தில் தன்யா ரவிச்சந்திரன் மற்றும் டேனியல் பாலாஜி ஆகிய இருவரும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குனர் ஜேபி இயக்க ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ராமலிங்கம் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை இளையராஜா செய்துள்ளார். அதுல் இண்டியா மூவிஸ் நிறுவனம் சார்பாக அதுல் எம் போஸாமியா தயாரித்துள்ளார். மருத்துவத்துறையில் நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய படமாக ‘பிபி 180’உருவாகியுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது பின் தயாரிப்புப் பணிகள் முடிந்துள்ளது.
இந்நிலையில், மறைந்த டேனியல் பாலாஜி, தன்யா ரவிச்சந்திரன் நடித்த ‘பிபி 180’ டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது.







