28 ஆண்டுகளுக்கு முன்பே சாதிய ஒழிப்பு படைப்பை வழங்கியவர் சேரன்- நடிகர் ஆரி

ஒரு காதலுக்குப் பிறகு மீண்டும் ஒரு காதல் வரும் என்ற நம்பிக்கையை கொடுத்த படம்தான் ‘ஆட்டோகிராப்’ என்று நடிகர் ஆரி கூறியுள்ளார்.
சென்னை,
பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். இவர் கடந்த 2004-ம் ஆண்டு சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடித்தத் திரைப்படம் ‘ஆட்டோகிராப்’. இதில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது. படக்குழுவினர் ‘ஆட்டோகிராப் ரீயூனியன்’ எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த ரீயூனியன் நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இத்திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் ஆரி பேசுகையில், “அந்த காலகட்டத்தில் ஒரு கேரக்டருக்காக உடலை வருத்திக் கொள்வது கமல்ஹாசன் ஒருவர் மட்டும்தான். அதன் பிறகு நடிகர் விக்ரம் அந்த விஷயங்களில் ஆர்வம் காட்டினார். சேரன் அதே போல் விருப்பத்துடனும் ஈடுபாட்டுடனும் கேட்டபோது, இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைக்குமே என்பதால் அவருடைய ஜிம் டிரெயினராக மாறினேன்.
இன்று சாதிய ஒழிப்பு தொடர்பான படைப்புகளை வழங்குகிறார் என மாரி செல்வராஜ் கொண்டாடப்படுகிறார். ஆனால் 28 ஆண்டுகளுக்கு முன்பே 'பாரதி கண்ணம்மா' படத்தின் மூலம் சாதியம் சார்ந்து சாதிய ஒழிப்பு தொடர்பான படைப்பை கொடுத்தவர் சேரன். அதேபோல் ஆட்சியின் நிறை குறைகளை பற்றி 'தேசிய கீதம்' படத்தின் மூலம் துணிச்சலுடன் சொன்ன இயக்குநரும் சேரன் தான்.

ஒரு காதலுக்குப் பிறகு மீண்டும் ஒரு காதல் வரும் என்ற நம்பிக்கையை கொடுத்த படம்தான் ‘ஆட்டோகிராப்’. ஒரு காதலுடன் வாழ்க்கை முடிந்து விட்டது என்று நினைத்த ஏராளமான இளைஞர்கள் மத்தியில் இப்படி ஒரு படம் வந்தவுடன் மற்றொரு காதல் வரும் என்ற எதிர்பார்ப்பையும், நம்பிக்கையும் ஏற்படுத்தியது. காதல் தொடர்கதைதான் என்ற விசயத்தை சொன்ன படம் ஆட்டோகிராப்” என்றார்.






