திரைப்பட சான்றிதழ் ஆய்வுக்குழுவில் 50 சதவீதம் பெண்கள்- மத்திய அரசு உறுதி

representation image (Grok AI)
திரைப்படங்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்படும் ஒவ்வொரு ஆய்வுக்குழு மற்றும் மறுசீராய்வுக் குழுவிலும் 50 சதவீத பெண்கள் இடம்பெற வேண்டும் என்பது கட்டாயமாகும்.
புதுடெல்லி,
திரைப்பட தணிக்கை நடைமுறைகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் உறுதி செய்துள்ளது. ஒளிப்பதிவு (சான்றிதழ்) விதிகள் 2024-ன் படி, வாரியம் மற்றும் ஆலோசனைக் குழுக்களில் 3-ல் ஒரு பங்கு பெண்கள் இடம்பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும், திரைப்படங்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்படும் ஒவ்வொரு ஆய்வுக்குழு மற்றும் மறுசீராய்வுக் குழுவிலும் 50 சதவீத பெண்கள் இருப்பதை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் உறுதி செய்து வருகிறது.
வாரிய உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒளிப்பதிவு சட்டம் 1952-ன் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. அதன்படி, ஒரு உறுப்பினரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் வரை இருக்கும். புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை தற்போதைய உறுப்பினர்கள் பதவியில் தொடருவர். மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் தனது வருடாந்திர அறிக்கையை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் ஆண்டுதோறும் சமர்ப்பிக்கிறது.
இந்த தகவல்களை மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.






