இந்த ஆண்டு வரவிருக்கும் அனுஷ்கா ஷெட்டியின் திரைப்படங்கள்

அனுஷ்கா ஷெட்டி கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தில் நடித்திருந்தார்.
சென்னை,
'அருந்ததி' பேய் படத்தில் நடித்து பிரபலமான அனுஷ்கா ஷெட்டி, தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, மாதவன், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
'இஞ்சி இடுப்பழகி' படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தநிலையில், பின்னர் நடித்த 'பாகுபலி' முக்கிய படமாக அமைந்தது. இவர் கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படத்தில் நடித்திருந்தார்.
தற்போது அனுஷ்கா 'காதி' படத்தில் நடித்து முடித்துள்ளார். விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் கடந்த 18-ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப்போனது. பின்னர் இப்படம் குறித்து எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.
அடுத்ததாக அனுஷ்கா நடித்துள்ள படம் 'கத்தனார்- தி வைல்ட் சோர்சரர்'. இது இவரது மலையாள அறிமுக படமாகும். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தநிலையில் விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 'பாகமதி 2' உருவாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.