9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் நடிகை மந்த்ரா

தமிழ் சினிமாவை விட்டு தான்எங்கும் போய்விடவில்லை என்று நடிகை மந்த்ரா கூறியுள்ளார்.
லவ்டுடே, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கவுரி, ரெட்டை ஜடை வயசு போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தவர், மந்த்ரா. திருமணத்துக்கு பிறகு படங்கள் நடிப்பதை தவிர்த்த மந்த்ரா, சிறிய இடைவெளிக்கு பிறகு 'ராஜா' படத்தில் அஜித்துடன் 'வாடியம்மா வாடி...' என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு கலக்கினார். கடைசியாக 2016-ம் ஆண்டில் வெளியான 'கவலை வேண்டாம்' படத்தில் அவர் நடித்திருந்தார். அதேவேளை தெலுங்கில் சில படங்கள் நடித்தார்.
இதற்கிடையில் மவுலி எம்.ராதாகிருஷ்ணன் தயாரித்து, நவீன் டி.கோபால் இயக்கி அருணாசலம்-ஜனனி நடித்துள்ள 'உசுரே' படத்தில் மந்த்ரா நடித்துள்ளார். 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிப்பது குறித்து மந்த்ரா கூறுகையில், "தமிழ் சினிமாவை விட்டு நான் எங்கும் போய்விடவில்லை. இடையில் லேசான இடைவெளி விழுந்துவிட்டது. நல்ல கதாபாத்திரத்துக்காக காத்திருந்தேன். அந்தவகையில் 'உசுரே' படத்தில் நடித்துள்ளேன். நிறைய பேர் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். நானும் அப்படி நடித்துவிட்டு போக விரும்பவில்லை. ஒருநாள் சூட்டிங் இருந்தாலும் பரவாயில்லை, அந்த கதாபாத்திரம் வலிமையுள்ளதாக இருக்கவேண்டும். அப்படித்தான் இந்த படம் எனக்கு கிடைத்துள்ளது" என்றார்.