தோரணமலையில் நடந்த பஞ்சபூத வழிபாட்டில் நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் பங்கேற்பு


தோரணமலையில் நடந்த பஞ்சபூத வழிபாட்டில் நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் பங்கேற்பு
x

நடிகர்கள் இருவரும் மாலையில் முத்துமாலைபுரத்தில் உள்ள இலவச படிப்பகத்திற்கு சென்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அதன்படி ஞாயிறுதோறும் விருட்சபூஜை மற்றும் பஞ்சபூத பூஜை நடைபெறும்.

வழக்கம்போல் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு பூஜை நடந்தது. முதன்முதலில் விநாயகர் சன்னதிக்கு பின்புறம் உள்ள அரசு-வேம்பு மரத்திற்கு பால், குங்கும அபிஷேகம் நடந்தது. பின்னர் அந்த மரங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதனை அடுத்து சுனையிலம், கன்னிமாரம்மன் சன்னதியி்லும் பூஜை நடந்தது.

அதன்பின் 27 நட்சத்திர செடிகளுக்கு பூஜை நடந்தது. அதனுடன் பஞ்சபூத பூஜையும் நடந்தது. இதற்காக மலையில் உள்ள சுனையில் இருந்து 27 பெண்கள் கலசத்தில் புனித நீர் கொண்டு வந்தனர். அந்த நீரை நட்சத்திர விருட்சங்களுக்கு ஊற்றி பூஜை நடந்தது. பஞ்சபூதங்களுக்கு பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சூரிய வழிபாடும் நடந்தது.

இந்த பூஜையில் நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள நூல் நியைத்திற்கு சென்று பார்வையிட்டனர். அவர்கள் இருவரும் பக்தர்களிடம் பேசும்போது “தோரணமலை பற்றி நாங்கள் அறிந்து இருந்தோம். இப்போதுதான் வருகை தந்துள்ளோம். இங்கு நடக்கும் பூஜைகள் சிறப்பானது. மாணவர்கள் படிக்க நூலகம் இந்த கோவிலில்தான் அமைக்கப்பட்டு உள்ளது” என்றனர்.

பூஜையில் பங்கேற்ற அனைவருக்கு காலையிலும் மதியமும் அன்னதானம் வழங்கப்பட்டது. நடிகர்கள் முத்துக்காளையும் கிங்காங்கும் மாலையில் முத்துமாலைபுரத்தில் உள்ள கே.ஆதிநாராயணன்-சந்திரலீலா மாலைநேர இலவச படிப்பகத்திற்கு சென்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். இதற்கான ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.

1 More update

Next Story