71வது திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 3 தேசிய விருதுகளை வென்ற "பார்க்கிங்"

71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 2023ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படமாக 'பார்க்கிங்' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதுக்கு பார்கிங் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்வுக்கான போட்டியில் 332 படங்கள் இடம்பெற்றன.
பார்க்கிங் படத்துக்கு மூன்று விருதுகள்
தமிழில் சிறந்த திரைப்படமாக பார்க்கிங் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநராக ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.
சிறந்த துணை நடிகர்
2023ஆம் ஆண்டு வெளியான பார்க்கிங் படத்தில் நடித்திருந்த எம்.எஸ். பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைக் கதை
பார்க்கிங் படத்துக்கு சிறந்த தமிழ் படத்துக்கான விருதுடன், சிறந்த திரைக் கதைக்கான தேசிய விருதும் பெற்றுள்ளது.
திரில்லர் டிராமாவான இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வாடகை வீட்டில் இருக்கும் ஒருவருக்கும், வீட்டு உரிமையாளருக்கும் இடையில் காரை பார்க் செய்வது தொடர்பாக எழும் மோதல்களே படத்தின் கதை.
பார்க்கிங் திரைப்படம் 5 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 4 இந்திய மொழிகளிலும் ஒரு சர்வதேச மொழியிலும் இத்திரைப்படம் ரீமேக் ஆகி இருந்தது. இந்நிலையில், சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் ஆகிய 3 பிரிவுகளில் பார்க்கிங் திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது.