
விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்குவதில் திமுக அரசு அலட்சியம்: அன்புமணி குற்றச்சாட்டு
காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழையில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலும், நவம்பர் மாதம் பெய்த மழையில் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவிலும் நெற்பயிர்கள் சேதமடைந்த நிலையில் அவற்றுக்கான இழப்பீடு இன்னும் வழங்கப்படாததைக் கண்டித்து கடந்த 23-ம் தேதி அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அதைத் தொடர்ந்து மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீடு அறிவிப்பு என்று வெளியான செய்திகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.
ஆனால், செய்திகளைப் படித்துப் பார்த்த போது தான் கடந்த ஆண்டு நவம்பர், திசம்பர் மாதங்களிலும், நடப்பாண்டின் ஜனவரி மாதத்திலும் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குத் தான் ரூ.289.63 கோடி நிவாரணம் வழங்குவதற்கு இப்போது ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதுவும் எப்போது வழங்கப்படும் என்பது தெரியவில்லை.
நடப்பாண்டில் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இன்று வரை நிவாரணம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக இதுவரை மொத்தம் 5 முறை நான் அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். ஆனாலும், நிவாரணம் வழங்க அரசு தயாராக இல்லை. அதனால், நடப்பாண்டிற்கான இழப்பீடு அடுத்த ஆண்டு தான் கிடைக்குமோ? என்ற ஐயம் உழவர்கள் மத்தியியில் ஏற்பட்டுள்ளது.






