
பா.ஜனதா- சிவசேனா திடீர் மோதல்: மராட்டிய அரசியலில் பரபரப்பு
மராட்டியத்தில் பா.ஜனதா தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மகாயுதி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. நேற்று கல்யாண் - டோம்பிவிலியை சோ்ந்த சிவசேனா முன்னாள் கவன்சிலர்கள் சிலர் மாநில தலைவர் ரவீந்திர சவான் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தனர்.
இந்தநிலையில் நேற்று வாராந்திர மந்திரி சபை கூட்டம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மந்திராலயாவில் நடந்தது. கூட்டத்தில் சிவசேனா தரப்பில் துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மட்டுமே கலந்து கொண்டார். சிவசேனா மந்திரிகள் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சிவசேனா மந்திரிகள் மந்திரி சபை கூட்டத்தை புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மகாயுதி கூட்டணியில் மோதல் ஏற்பட்டதாக எதிர்க்கட்சியினர் கூறினர்.






