
விஜய்யின் பரப்புரை கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் காலையிலேயே குவிந்த தொண்டர்கள்
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் இன்று (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது. மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். முன்னதாக சென்னையில் இருந்து விமானத்தில் கோவை விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வருகிறார்.
இந்நிலையில் விஜய்யின் பரப்புரை கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் காலையிலேயே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
விஜய் வருகையை முன்னிட்டு நேற்று இரவில் இருந்தே பொதுக்கூட்ட மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நேற்று 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மைதானத்தை சுற்றிலும் தொட்டிகள் வைக்கப்பட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.






