
போர் கைதிகள் பரிமாற்ற பணியில் உக்ரைன்... அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால், ரஷியாவோ போரை நிறுத்தும் முடிவுக்கு வரவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, ரஷியாவுடன் கைதிகள் பரிமாற்றத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. போர் கைதிகளை திரும்ப பெறுவதற்கான பல கூட்டங்கள், பேச்சுவார்த்தைகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் உதவியுடன் ஆலோசனைகள் நடந்து வருகின்றன என உக்ரைனின் தேச பாதுகாப்பு மற்றும் ராணுவ கவுன்சிலின் செயலாளர் ரஸ்டெம் உமரோவ் கூறியுள்ளார்.






