வார ராசிபலன் - 31.08.2025 முதல் 06.09.2025 வரை


Weekly Rasipalan - 31.08.2025 to 06.09.2025
x

மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் 3, 4, 5 ஆகிய இடங்களில் சுப கிரகங்கள் சஞ்சரிப்பதால் முயற்சிகளுக்கு ஏற்ற தன லாபம் வந்து சேரும்.

இந்த வார ராசிபலன்:-

மேஷம்

பெரியோர் சொல்லுக்கு மரியாதை அளிக்கும் மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் 3, 4, 5 ஆகிய இடங்களில் சுப கிரகங்கள் சஞ்சரிப்பதால் முயற்சிகளுக்கு ஏற்ற தன லாபம் வந்து சேரும்.

ரெடிமேட் ஆடை தயாரிப்பு, மகளிர் ஆபரண உற்பத்தி துறையினருக்கு தொழில் விருத்தியும், புத்தக விற்பனை, தினசரி சந்தை வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த வரவும் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியிட மாற்றம் அல்லது பதவி உயர்வு பெறுவார்கள்.

ரியல் எஸ்டேட்டில் புதிய திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். ஷேர் மார்க்கெட்டில் பெட்ரோலியம், நிலக்கரி, சுரங்க நிறுவன பங்குகளில் ஆதாயம் உண்டு. மாணவர்கள் வண்டி வாகனங்களில் மெதுவாக செல்வது நல்லது.

சிறுநீரக தொற்று, அடி வயிற்றில் வலி ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். உக்ர தெய்வ கோவில் அன்னதானத்திற்கு உதவி செய்வதும், வயதான பெண்களுக்கு பொருளுதவி செய்வதும் நன்மை தரும்.

ரிஷபம்

பொதுவெளியில் பிறர் மதிப்பை பெற்று பெருந்தன்மையோடு நடந்து கொள்ளும் ரிஷபம் ராசியினருக்கு இந்த வாரம் 2, 3, 4 ஆகிய இடங்களில் சுப கிரகங்கள் இருப்பதால் செல்வாக்கு அதிகரிக்கும்.

பிளைஆஷ் பிரிக், செங்கல் தயாரிப்பு, விவசாயம் போன்றவை விருத்தி செய்வார்கள். ஏற்றுமதி-இறக்குமதி, கட்டிடப்பொருள் வியாபாரிகளுக்கு நல்ல காலம். பணிபுரியும் பெண்கள் சம்பள உயர்வும், விரும்பிய இடமாற்றமும் பெறுவர்.

ரியல் எஸ்டேட்டில் தொழிலாளர்களின் சிக்கல்களை விசாரித்து சரி செய்ய வேண்டும். ஷேர் மார்க்கெட்டில் உணவு, மசாலா பொருள் நிறுவன பங்குகள் மூலம் லாபம் உண்டு. பொறியியல் மாணவர்கள் புதிய ப்ராஜெக்ட்களில் நல்ல பெயர் பெறுவார்கள்.

ரத்த அழுத்தம், நீரிழிவு உடையவர்கள் மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பெருமாள் கோவிலுக்கு வரும் கன்னிப் பெண்களுக்கு பூ, குங்குமம், இனிப்பு தானமாக வழங்க நன்மை ஏற்படும்.

மிதுனம்

சொந்தங்களையும், உறவுகளையும் அனுசரித்து செல்லும் கொள்கை கொண்ட மிதுனம் ராசியினருக்கு இவ்வாரம் 1, 2, 3 ஆகிய இடங்களில் உள்ள சுபர்கள் பயணங்களால் நன்மை தருவார்கள்.

தானியங்கள், விவசாய விளைபொருள் தொழில் துறையினர் புதிய முயற்சிகளை திட்டமிட்டு தொடங்க வேண்டும். பேன்சி ஆடை, தங்க நகை வியாபாரிகள் பணம் கொடுக்கல்-வாங்கல் விஷயங்களில் ஆதாயம் பெறுவர். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரி ஆதரவால் நன்மை அடைவர்.

ரியல் எஸ்டேட்டில் அரசு சம்பந்தமான விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும். ஷேர் மார்க்கெட்டில் நிலக்கரி, எரிவாயு, பெட்ரோலிய நிறுவன பங்குகளில் ஆதாயம் உண்டு. மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளில் பங்கு பெற முயற்சிகள் எடுப்பர்.

அலைச்சல், நேரம் தவறி சாப்பிடுவது, ஜீரணக் கோளாறு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையால் குணமடையும். துர்க்கை, காளி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இனிப்பு வழங்குவதாலும், கோயில் வளாகத்தை சுத்தம் செய்வதாலும் நன்மை ஏற்படும்.

கடகம்

கழுவும் மீனில் நழுவும் மீன் என்று இடத்திற்கு ஏற்ப செயல்படும் கடகம் ராசியினருக்கு இந்த வாரம் 1, 2-ம் இடங்களில் சுப கிரகங்கள் இருப்பதால் குடும்ப விசேஷங்களில் கலந்து கொள்வார்கள்.

கல்வி நிறுவனங்கள், உணவகங்களை நடத்துபவர்கள் நற்பெயர் பெறுவர். திருமண மண்டபம், நகை வியாபாரிகள் தொழில் விரிவாக்கம் செய்து லாபம் பெறுவர். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் எதிர்ப்புகளை சந்தித்தாலும் கடமையை சரியாக செய்து விடுவார்கள்.

ரியல் எஸ்டேட்டில் புதிய கட்டுமான திட்டங்களை தொடங்கலாம். ஷேர் மார்க்கெட்டில் பெட்ரோல், பால் உற்பத்தி நிறுவன பங்குகள் மூலம் லாபம் உண்டு. மாணவர்கள் பொறியியல், கணினி மேற்படிப்பு குறித்து முடிவெடுப்பர்.

சிறுநீரக, ஜீரணக் கோளாறுகள் ஏற்பட்டு சிகிச்சை மூலம் சீராகும். படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு வஸ்திர தானம், பொருள் தானம் அளிப்பது நன்மை தரும்.

சிம்மம்

கோபம் உள்ள இடத்தில் நல்ல குணம் இருக்கும் என்ற வழக்கு மொழிக்கு உதாரணமாக உள்ள சிம்மம் ராசியினருக்கு இந்த வாரம் ஆட்சிபெற்ற ராசியதிபதி மனதில் ஆன்மிக எண்ணங்களை தருவார்.

வேளாண்மை, இரும்பு தொழில் துறையினருக்கு லாபமான வாரம். மளிகை, நகை வியாபாரிகள் திட்டமிட்ட தொழில் முயற்சிகளை செய்யலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் பொறுப்புகள் கூடும்.

ரியல் எஸ்டேட் மற்றும் ஷேர் மார்க்கெட்டில் இந்த வாரம் புதிய தொடர்புகள் மூலம் லாபமும், வளர்ச்சியும் ஏற்படும். மாணவியர்கள் கல்வியிலும், விளையாட்டிலும் சாதனை புரிந்து கல்வி நிறுவனத்திற்கு பெருமை சேர்ப்பர்.

பல்வேறு செலவுகளால் மன உளைச்சல், உடல் அசதி ஏற்பட்டு விலகும். ஆதரவற்ற முதியோருக்கு அன்னதானம் செய்வதாலும், முருகன் கோவிலில் தினமும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதாலும் நன்மை ஏற்படும்.

கன்னி

சிக்கலான சூழ்நிலையிலும் சிந்தித்து நகைச்சுவையாக பேசும் குணம் உள்ள கன்னி ராசியினருக்கு 10, 11-ம் இடங்களில் உள்ள சுபர்கள் தொடங்கிய காரியங்களில் வெற்றி தருவார்கள்.

தானியங்கள், மசாலா வியாபாரிகள் புதிய வர்த்தக தொடர்பு பெற்று முன்னேற்றம் அடைவர். எந்திர தொழில் முனைவோர் புதிய பாதையில் செல்வர். உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு பெயர் பெறுவர்.

ரியல் எஸ்டேட்டில் நடக்கும் கட்டிட பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஷேர் மார்க்கெட்டில் அரசு பங்குகளில் முதலீடு செய்வதில் கவனம் தேவை. மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றியடைவர்.

ரத்த அழுத்தம், நீரிழிவு உடையவர்கள் மருந்துகளை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். வயதான உறவினர்களுக்கு பரிசு வழங்கி, ஆசி பெறுவதால் நன்மை உண்டு.

துலாம்

எதையும் விட்டுக் கொடுக்காமல், ஜெயித்துக் காட்டும் துலாம் ராசியினருக்கு இவ்வாரம் 9, 10-ம் இடங்களில் உள்ள சுபர்கள் உங்களது சமூக முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவார்கள்.

மளிகை, விவசாய விளைபொருள் தொழில் துறையினருக்கு நல்ல காலகட்டம். எலக்ட்ரானிக்ஸ், ரெடிமேட் ஆடை, ஆபரண வியாபாரிகளுக்கு வர்த்தகம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி உயர்வு, மதிப்பு உண்டு.

ரியல் எஸ்டேட் இந்த வாரம் லாபகரமாக இருக்கும். ஷேர் மார்க்கெட்டில் எரிவாயு, பால் பொருள் நிறுவன பங்குகள் ஆதாயம் தரும். மாணவர்கள் ஆசிரியர் வழிகாட்டுதல் மூலம் உயர் கல்விக்கு அப்ளை செய்வர்.

உறவினர்கள் ஏச்சுகளால் மன உளைச்சல், பல இடங்களில் அலைவது போன்றவற்றால் உடல், மனச்சோர்வு ஏற்பட்டு விலகும். குலதெய்வ, இஷ்ட தெய்வ மந்திரத்தை வாய் விட்டு உச்சாடனம் செய்வது நன்மை தரும்.

விருச்சிகம்

உணர்வுப்பூர்வமாக பேசி காரிய வெற்று பெறும் திறன் பெற்ற விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம் 10-ல் உள்ள சூரியன் சமூக மதிப்பை ஏற்படுத்துவார்.

விவசாயம், லேத் தொழில் துறையில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். நுகர்பொருள், மசாலா ஏற்றுமதி வியாபாரத்தில் பணப்புழக்கம் ஏற்பட்டு தொழில் விருத்தி பெறும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் உரிய அங்கீகாரம் பெறுவர்.

ரியல் எஸ்டேட்டில் எதிர்பார்த்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஷேர் மார்க்கெட்டில் தங்கம், அழகு சாதன பொருள் நிறுவன பங்குகளில் லாபம் அடைவர். மாணவர்கள் எதிர்கால நலனுக்கேற்ற புதிய தொழில்நுட்பங்களை கற்பர்.

காய்ச்சல், சளி, வயிற்று கோளாறு ஏற்பட்டு மருத்துவத்தால் குணமடையும். பெருமாள் கோவிலில் நீர்மோர், பானகம், சர்க்கரை பொங்கல் தானம் வழங்குவதால் நன்மை ஏற்படும்.

தனுசு

எடுத்த காரியத்தில் துணிச்சலாக செயல்பட்டு வெற்றி பெறும் தனுசு ராசியினருக்கு இந்த வாரம் 7, 8, 9-ல் உள்ள சுபர்கள் நண்பர்கள் மூலம் நன்மை தருவார்கள்.

சுற்றுலா, கேட்டரிங் தொழில்கள் லாபகரமாக நடக்கும். நகை, ஆடை ஆபரண வியாபாரிகள் எதிர்பார்த்த ஆதாயங்களை அடைவர். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு.

ரியல் எஸ்டேட்டில் புதிய முதலீடு செய்யலாம். ஷேர் மார்க்கெட்டில் எரிவாயு, பொதுத்துறை பங்குகள் மூலம் லாபம் உண்டு. மாணவர்கள் வெளியூர் சென்று தொழிற்பயிற்சி பெறுவார்கள்.

குடும்ப சுப காரியங்கள், பொதுக்காரியங்களில் ஈடுபட்டு பல இடங்களுக்கும் சென்று வருவதால் உடல் அசதியும், காய்ச்சலும் ஏற்படும். குலதெய்வ, இஷ்ட தெய்வ கோவிலுக்கு பசும்பால் அபிஷேகம் செய்வதன் மூலம் நன்மை உண்டு.

மகரம்

கருத்தோடு பேசி மற்றவர் மனம் கவரும் குணம் கொண்ட மகரம் ராசியினருக்கு இந்த வாரம் 7-ம் இடத்தில் உள்ள சுக்கிரன் பெண் நண்பர்கள் மூலம் பல நன்மைகளை தருவார்.

கணினி, எந்திர உற்பத்தி தொழில் துறையினர் தொழில் விரிவாக்கம் செய்யலாம். ஸ்டேஷனரி, தினசரி சந்தை வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்கள் பெருகி லாபம் அடைவர். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் நற்செய்தி கிடைக்கப் பெறுவர்.

ரியல் எஸ்டேட்டில் புதிய பகுதிகளில் கட்டுமான பணிகளை தொடங்கலாம். ஷேர் மார்க்கெட்டில் பெட்ரோல், விவசாய விளைபொருள் பங்குகள் மூலம் ஆதாயம் உண்டு. மாணவர்கள் தேர்வுகள், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று கல்வி நிறுவனங்களுக்கு பெருமை சேர்ப்பர்.

தலைவலி, மன உளைச்சல் காரணமாக தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டால் உடனே மருத்துவ சிகிச்சை பெறவும். கன்றோடு கூடிய பசு மாட்டுக்கு அருகம்புல் வழங்குவதும், சுமங்கலி பெண்களுக்கு சந்தனம், குங்குமம், பண உதவி செய்வதன் மூலம் நன்மை ஏற்படும்.

கும்பம்

யாரிடம் எதை பேசினால் காரியம் சாதிக்க முடியும் என்ற நுட்பத்தை அறிந்த கும்பம் ராசியினருக்கு 5, 7-ம் இடத்தில் உள்ள சுபர்கள் நீண்ட காலமாக இழுத்தடித்த நல்ல விஷயங்களை நடத்தி வைப்பார்கள்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில், வங்கித் துறையினருக்கு புதிய வாய்ப்புகளில் லாபம் பெருகும். நுகர்பொருள், பேன்ஸி பொருள் வியாபாரிகள் தொழில் விரிவாக்கம் செய்யலாம். உத்தியோகஸ்தர்கள் பணியில் துணிச்சலாக செயல்பட்டு சாதனை புரிவார்கள்.

ரியல் எஸ்டேட்டில் புதிய திட்டங்களால் லாபம் ஏற்படும். ஷேர் மார்க்கெட்டில் ஏற்றுமதி-இறக்குமதி பங்குகள் மூலம் ஆதாயம் உண்டு. மாணவர்கள் உள்லரங்க விளையாட்டில் சாதனை செய்வர்.

நேரத்துக்கு உணவு உண்பது, உடல் அசதி அல்லது வலி ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவதன் மூலம் உடல் நலனை பாதுகாக்கவும். காது கேளாதோர், பார்வையற்றோருக்கு அன்னதானம், சகோதர-சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்குவதாலும் நன்மை ஏற்படும்.

மீனம்

பார்த்தால் பசு பாய்ந்தால் புலி என்ற குணத்துக்கு உதாரணமாக உள்ள மீனம் ராசியினருக்கு இந்த வாரம் 4, 5-ல் அமர்ந்துள்ள சுபர்கள் வீடு, மனை, வண்டி வாகனம், சுற்றுலா யோகத்தை தருவார்கள்.

வேளாண் விளைபொருள் தொழில் துறையினருக்கு அரசு மூலம் நன்மையும், மருந்து விற்பனை, மூலிகை மருந்து ஏற்றுமதி வியாபாரிகளுக்கும் ஆதாயம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் பணி மாற்றமோ, சம்பள உயர்வோ பெறுவர்.

ரியல் எஸ்டேட்டில் புதிய கட்டுமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஷேர் மார்க்கெட்டில் ஏற்றுமதி-இறக்குமதி பங்குகள் மூலம் லாபம் உண்டு. மாணவர்கள் வெளிநாட்டு பணி, பொறியியல் பணி வாய்ப்பு குறித்த வழிகாட்டுதல் கிடைக்கப் பெறுவர்.

விக்கல், மூச்சுக்கோளாறு, வயிற்று வலி ஏற்பட்டு விலகும். அருகில் உள்ள அம்பிகை, தாயார் கோவிலுக்கு தாழம்பூ குங்குமம் தருவதும், வஸ்திரம் சமர்ப்பணம் செய்வதும் நன்மை தரும்.

1 More update

Next Story