வார ராசிபலன் - 14.09.2025 முதல் 20.09.2025 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.
இந்த வார ராசிபலன்:-
மேஷம்
எதுவும் சில காலம் என்ற தத்துவத்தை மனதில் கொண்டு நடக்கும் மேஷ ராசியினர் மனதில் இந்த வாரம் புதிய தெளிவு ஏற்படும். இல்லத்தரசிகள் மனதில் நினைத்த சுப காரியங்கள் நடந்தேறும்.
வியாபாரிகள், தொழில் துறையினர் புதிய முதலீடுகள், தொழில் கூட்டாளிகள் மூலம் லாபம் அடைவர். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த தடைகள் விலகும்.
அரசியல், பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் சமூகத்தில் மதிப்பும் அந்தஸ்தும் பெறுவார்கள். மாணவர்கள் வேடிக்கை விளையாட்டுகளில் இருந்து விலகி பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் ஆகியவை ஏற்பட்டு விலகும். முருகப்பெருமான் வழிபாடு, பெற்றெடுத்த அன்னை, உடன் பிறந்தோர் ஆகியோருக்கு பரிசுகள் வழங்குவதால் நன்மை ஏற்படும்.
ரிஷபம்
எக்காரியத்திலும் கண்ணாக இருந்து வெற்றி பெறும் ரிஷப ராசியினர் புதிய பயணங்களை மேற்கொண்டு காரிய வெற்றி அடைவர். குடும்பத்தில் தடைபட்ட திருமண விஷயங்கள் நல்லவிதமாக நடக்கும்.
தொழில்துறையினர், வியாபாரிகள் திட்டமிட்ட லாபம் பெறுவர். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிட மாறுதல், ஊதிய உயர்வு உண்டு.
அரசியல், பொதுவாழ்க்கையில் உள்ளவர்களுக்கு புதிய சிக்கல்கள் ஏற்படும். மாணவர்கள் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஆசிகளை பெறுவது எதிர்கால வெற்றிக்கு வழிவகுக்கும்.
பல இடங்களுக்கும் பிரயாணம் மேற்கொள்வதால் உடல் அசதி ஏற்பட்டு விலகும். இந்த வாரம் முடிந்த வரை விரதம் கடைபிடித்து, அந்த நாட்களில் வயது முதிர்ந்தவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது.
மிதுனம்
சொன்னதை சொன்னபடி செய்து முடிக்கும் மன உறுதி பெற்ற மிதுனம் ராசியினருக்கு இந்த வாரம் அரசு உதவிகள் கிடைக்கும். பணி புரியும் பெண்மணிகளுக்கு பதவி உயர்வு உண்டு.
தொழில்துறையினர், வியாபாரிகள் தொழில் விருத்தி செய்யும் சூழலும், அலுவலக இடமாற்றமும் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் சங்கடங்களை சந்தித்து, அதன் மூலம் ஆதாயம் பெறுவர்.
வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பொது வாழ்க்கை, அரசியலில் இருப்பவர்கள் மக்கள் நலப்பணியால் பிரபலம் அடைவர். வெளிநாட்டு பணி குறித்த தகவல்களை மாணவர்கள் பெறுவர்.
சளி, இருமல், தலைவலி ஏற்பட்டு சிகிச்சை மூலம் விலகும். அறக்கட்டளை, அன்னதானம், கோவில் காரியங்களுக்கு பொருள் உதவி, உடல் உழைப்பு அளிப்பதன் மூலம் நன்மை ஏற்படும்.
கடகம்
மனதில் குழப்பம் இருந்தாலும், தீர்க்கமாக செயல்படும் கடகம் ராசியினரின் தோற்றம் இந்த வாரம் புதிய பொலிவோடு இருக்கும். உறவினர்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று இல்லத்தரசிகள் மகிழ்வர்.
தொழில் துறையினர், வியாபாரிகள் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியிட பொறுப்பு அதிகரிக்கும்.
பொது வாழ்க்கை மற்றும் அரசியலில் இருப்பவருக்கு சிக்கல்கள் ஏற்பட்டு விலகும். மாணவர்கள் தங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி விளையாட்டு போட்டிகளில் பரிசுகள் பெறுவார்கள்.
முதுகு வலி, அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இந்த வாரம் முடிந்தவரை மௌன விரதம் அனுசரிப்பதாலும், ஓரிரு நாட்கள் உண்ணா விரதம் இருப்பதாலும் நன்மை உண்டு.
சிம்மம்
கெட்டவர்களுக்கும் நன்மை செய்யும் மனம் கொண்ட சிம்ம ராசியினர், இந்த வாரம் பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வார்கள். பணிபுரியும் பெண்மணிகளுக்கு பதவி உயர்வு உண்டு.
தொழில் துறையினர், வியாபாரிகள் பங்குதாரர்கள் விஷயத்தில் கவனமாக செயல்பட வேண்டும். புதிய முதலீடுகளைச் சிறிது காலம் தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த சிக்கல்கள் விலகும்.
பொதுவாழ்க்கை, அரசியலில் இருப்பவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டு அதன் மூலம் நன்மை உருவாகும். மாணவர்கள் புதுமையாக சிந்தித்து, திறமையாக செயல்பட்டு கல்வி நிறுவனங்களுக்கு பெருமை சேர்ப்பர்.
கை-கால் அசதி, காய்ச்சல், தலைவலி ஏற்பட்டு சிகிச்சை மூலம் குணமடையும். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பண உதவி, மருத்துவ உதவி செய்வதால் நன்மை ஏற்படும்.
கன்னி
எடுத்த காரியத்தை கடைசி வரை நின்று செய்து முடிக்கும் திட மனம் கொண்ட கன்னி ராசியினருக்கு இவ்வாரம் மனதில் உள்ள குழப்பங்கள் விலகும். இல்லத்தரசிகள் மனதில் இருந்த சங்கடங்கள் அகலும்.
வியாபாரம், தொழில் துறையில் இருப்பவர்கள் எதிர்பார்த்த முதலீடு, இடமாற்றம் அடைவர். உத்தியோகஸ்தர்கள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தனித்திறனை வெளிக்காட்டுவர்.
வேலை தேடுபவர்களுக்கும், வீடு கட்ட திட்டமிட்டவர்களுக்கும் எண்ணம் கைகூடும். அரசியல் துறையினருக்கு புதிய வாய்ப்பு வீட்டுக்கதவை தட்டும். மாணவர்கள் இரவில் வெளியிடங்களில் தங்குவதை தவிர்க்க வேண்டும்.
அடிவயிறு, முதுகில் வலி ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறவும். ஆதரவற்ற முதியோர்களுக்கு காலணிகள், பரிசுப் பொருள்கள் வழங்குவதால் நன்மை உண்டு.
துலாம்
நேர் வழியில் நடந்து எதையும் வெல்ல வேண்டும் என்ற கொள்கை கொண்ட துலாம் ராசியினர், இவ்வாரம் சமூகம், சொந்த பந்தம் இடையே நல்ல மதிப்பு பெறுவர். இல்லத்தரசிகள் கைகளில் பணம் புரளும்.
தொழில் துறையினர், வியாபாரிகள் ஆகியோர் தொழில் விரிவாக்கம் செய்யலாம். புதிய இயந்திரங்களை வாங்கலாம். உத்தியோகஸ்தர்கள் அவரவர் நிலைக்கு ஏற்ப பணி உயர்வு பெறுவார்கள்.
புதிய தொழில் தொடங்க முயற்சி செய்பவர்கள் வெற்றி பெறுவார்கள். பொதுவாழ்க்கை, அரசியலில் இருப்பவர்கள் மீடியா மூலம் பிரபலம் அடைவர். மாணவர்கள் அரசாங்க உதவித்தொகை, அரசு ஆதரவு மூலம் நன்மை பெறுவர்.
வெளியிடங்களில் சுகாதாரமற்ற நிலையில் பானங்களை பருகுவதை தவிர்க்க வேண்டும். வயதான உற்றார் உறவினர்களுக்கு பொருள் உதவி, பரிசு வழங்கி வாழ்த்து பெற்றால் நன்மை உண்டு.
விருச்சிகம்
மற்றவர் மனதில் உள்ள எண்ணங்களை சுலபமாக உணர்ந்து கொள்ளும் விருச்சிக ராசியினருக்கு இந்த வாரம் மதிப்பு மரியாதை உயரும். அரசு பணிகளில் உள்ள இல்லத்தரசிகளுக்கு பணி உயர்வு கிடைக்கும்.
தொழில் துறையினர், வியாபாரிகள் அரசாங்க உதவிகளை பெறுவார்கள். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடைய ஆதரவு பெற்று சிறப்பாக செயல்படுவார்கள்.
அரசு போட்டித் தேர்வுகளை எழுதியவர்கள் வெற்றி பெறுவர். பொது வாழ்க்கை, அரசியலில் இருப்பவர்கள் மக்களிடம் மதிப்பு பெறுவர். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய காலம் இது.
பல்வேறு காரணங்களுக்காக வெளியிடங்களில் அலைவதால் உடல் சோர்வு ஏற்படும். தந்தையின் உடன்பிறந்தவர்கள், தந்தை வழி உறவினர்களை வணங்கி, ஆசி பெறுவதால் நன்மை உண்டு.
தனுசு
பிறர் துயரை தன் துயர் போல நினைக்கும் தனுசு ராசியினர் இந்த வாரம் புதிய விஷயங்களில் ஈடுபட்டு திறமைகளை வெளிக்காட்டுவார்கள். பணிபுரியும் இல்லத்தரசிகளுக்கு பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும்.
வியாபாரிகள், தொழில் துறையினர் ஊழியர்கள் சம்பந்தமான சிக்கல்களை நுணுக்கமாக கையாள வேண்டும். தலைமை பொறுப்பில் உள்ள உத்தியோகஸ்தர்கள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
சிலருக்கு ஆன்மிக பயணம் உண்டு. பொதுவாழ்வு, அரசியலில் இருப்பவர்கள் திட்டங்களை வெளியில் தெரிவிக்காமல் செயல்பட வேண்டும். மாணவர்கள் நண்பர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு உற்சாகமடைவர்.
மன உளைச்சல், தலைவலி, உடல்வலி ஏற்பட்டு சிகிச்சை மூலம் அகலும். கோவிலில் கன்றுடன் உள்ள பசு மாட்டுக்கு அருகம்புல், வெண்பூசணி தருவதன் மூலம் சிரமங்கள் அகலும்.
மகரம்
பிறர் சுதந்திரத்தில் தலையிடா வாழ்வியல் நெறி கொண்ட மகர ராசியினர் இவ்வாரம் புதியவற்றை செய்து புகழ் பெறுவர். இல்லத்தரசிகள், பணிபுரியும் பெண்மணிகள் பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வர்.
வியாபாரிகள், தொழில் துறையினர் புதிய அலுவலகம் திறந்து தொழில் விரிவு செய்யலாம். புதிய முதலீடும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளில் திறமையாக செயல்படுவர்.
ஆன்மிகம், அரசியல், பொதுவாழ்க்கை ஆகியவற்றில் உள்ளவர்களுக்கு பண வரவு உண்டு. மாணவர்கள் எதிர்கால பணி குறித்து திட்டமிட வேண்டிய காலகட்டம் இது.
முதியோர், நாள்பட்ட சிகிச்சை பெறுவோர் மருத்துவ ஆலோசனை, மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அன்னை, அன்னை வழி உறவினருக்கு பரிசுகளை அளித்து ஆசி பெறுவதால் நன்மை உண்டு.
கும்பம்
எந்த விஷயத்திலும் காத்திருந்து காரிய வெற்றி பெறும் கும்ப ராசியினருக்கு இந்த வாரம் புதிய வாய்ப்புகள் வீட்டுக்கதவை தட்டும். இல்லத்தில் மங்கல இசை, மழலை ஒலி கேட்கும்.
வியாபாரிகள், தொழில் துறையினர் சற்று நிதானமாக திட்டமிட்டு செயல்பட வேண்டும். பணம் வரவு தாமதம் ஆகும். உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்க பெறுவர்.
கோவில் அர்ச்சகர்கள், வேதம் ஓதுவோர் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். அரசியல், பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் மதிப்பு பெறுவர். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் திறமை காட்டுவார்கள்.
கை-கால், முதுகு வலி, உடல் அசதி ஏற்பட்டு சிகிச்சை மூலம் சரியாகும். கோவில் திருப்பணிகளுக்கு நிதியுதவி செய்வது, நித்திய பூஜைக்கு பொருள் உதவி செய்வதும் நன்மை தரும்.
மீனம்
தடைகளை உடைத்து மனதில் நினைத்த விஷயத்தை செய்து முடிக்கும் மீன ராசியினருக்கு இந்த வாரம் சுப காரிய தடை விலகும். இல்லத்தரசிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சீராகும்.
தொழில் துறையினர், வியாபாரிகள் நல்ல லாபம் அடைவர். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை சந்தித்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
பொது வாழ்க்கை மற்றும் அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் புகழ் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் தனித்திறன்களை வெளிக்காட்டி பாராட்டு பெறுவர்.
ரத்த அழுத்தம், தலைவலி ஆகியவை ஏற்பட்டு விலகும். உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கும், ஆதரவற்ற முதியோருக்கும் அன்னதானம் செய்வதால் நன்மை உண்டு.