மனிதனை நல்வழிப்படுத்தும் தெய்வம் சனி பகவான்


மனிதனை நல்வழிப்படுத்தும் தெய்வம் சனி பகவான்
x

சனி பகவான் தண்டிக்கும் தெய்வம் மட்டுமல்லாமல், தவறு செய்பவர்களுக்கு தண்டனை கொடுத்து அவரை நல்வழிப்படுத்தும் தெய்வமாகவும் திகழ்கிறார்.

சனி பகவானை போல கொடுப்பாரும் இல்லை, சனி பகவானைப் போல கெடுப்பாரும் இல்லை என்பது சான்றோர் வாக்கு. ஒவ்வொருவரின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவர் சனி பகவான்.

ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் உச்சம் பெற்று இருந்துவிட்டால் திரண்ட செல்வத்தை தந்து சமுதாயத்தில் உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்று அனைவராலும் பாராட்ட வைப்பார். சனி பகவானின் பலத்தைப்பொருத்துத்தான் ஒரு மனிதனின் நேர்மையை கணித்து கூற முடியும். சனி கெட்டு நீசம் அடைந்துவிட்டால் நரம்புக் கோளாறுகள் உள்ளிட்ட சில பாதிப்புகள் வந்துவிடும். அவ்வாறு வரும்போது சனிக்குரிய பரிகாரங்களை செய்வதுடன் உரிய மருத்துவ சிகிச்சையையும் செய்ய, விரைவில் குணமடையும்.

சனி திசையில் ஒருவருக்கு கிடைக்கும் அனுபவத்தை எங்கும் பெற முடியாது. ஒருவரது வாழ்க்கையில் ஏழரை சனி வரும்போது அவர் கும்ப ராசியாகவோ அல்லது மகர ராசியாகவோ, அல்லது துலாம், ரிஷபம், மிதுனம், கன்னி ராசிகளாகவோ இருந்தால் நல்வழிப்படுத்தி விடுவார். அதே சமயத்தில் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் போன்ற ராசிகளாக இருந்தால் கடினமாக தண்டித்து பிறகு நல்வழிப்படுத்துவார். மீனம், தனுசு ராசிக்காரர்களுக்கு தண்டனையை கொடுத்து முன்னேற்றப் பாதையை காட்டுவார்.

அதாவது, சனிபகவான் தண்டிக்கும் தெய்வம் மட்டுமல்லாமல், தவறு செய்பவர்களுக்கு தண்டனை கொடுத்து அவரை நல்வழிப்படுத்தும் தெய்வமாகவும் திகழ்கிறார்.

பூஜை முறை

சனிக்கிழமை காலையில் சனி பகவானுக்கு எள்ளுசாதம், எள்கலந்த பலகாரம், பட்சணங்கள், கசப்பு பதார்த்தகங்கள் படைத்து பழம், தேங்காய் வெற்றிலைப் பாக்கு வைத்து வழிபடலாம். சனிக்கிழமை தோறும் விரதம் இருக்கலாம். எள்ளை ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிது போட்டு கட்டி, திரி போல் திரித்து விளக்கில் போட்டு நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றலாம். பூஜை முடிந்ததும், எள்ளு சாதம் முதலியவற்றில் சிறிது எடுத்து ஓர் இலையில் வைத்து காக்கைக்கு சாப்பிட வைக்கவேண்டும்.

பக்குவப்படுத்தும் சனி

ஒருவருக்கு சனி திசை நடக்கும்போது, அவர் எதன் மீது அதிக ஆசை பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார். அடுத்து அதனை இல்லாமல் போகவும் செய்வார். முடிவில் அதனை வட்டியும் முதலுமாக உரியவருக்கே திருப்பிக் கொடுப்பார் என்பது ஜோதிட நுட்பம். இப்படி மனிதனை பக்குவப்படுத்தும் நடவடிக்கையை சனி பகவான் மேற்கொள்கிறார்.


Next Story