தனுசு: புத்தாண்டு ராசிபலன் 2026: சுப அமைப்புடன் பிறக்கும் புத்தாண்டு.. இந்த வழிபாடு மிக முக்கியம்..!

எந்த ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்னதாக பெற்றோர், பெரியோர்களிடம் ஆலோசனை, ஆசி பெறுவது நல்லது.
தனுசு
குழந்தை பாக்கியம்
தனுசு ராசியினருக்கு இதுவரை தடைபட்ட யோக பலன்கள் இந்த ஆண்டு கையில் வந்து சேரும். ராசியில் இரு சுப கிரகங்கள் உள்ள நிலையில் ராசி அதிபதி குருவின் பார்வை பெற்ற சுப அமைப்புடன் இந்த புத்தாண்டு பிறக்கிறது. ஆண்டின் பிற்பகுதியில் ராசி அதிபதி உச்சம் பெற்று அஷ்டமஸ்தானத்திற்கு செல்ல இருக்கிறார். மறைமுக நன்மைகள் உங்களைத் தேடி வரும்.
அர்த்தாஷ்டம சனி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துவார். அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்கள் பொதுமக்களின் சிக்கல்களை தீர்க்க களமிறங்குவதன் மூலம் புகழ்பெறுவார்கள். பலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பெற்றோர்கள் ஆதரவு உண்டு. கொடுத்த வாக்கை நிறைவேற்றுங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசும்பொழுது உங்கள் கருத்தை தெளிவாக சொல்லி விடுங்கள்.
குடும்பம், நிதிநிலை
தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பேறு கிடைக்கும். சனியின் சஞ்சாரம் காரணமாக குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகும். வீடுகளுக்கு மராமத்து பணிகளை செய்ய வேண்டும். அன்னையின் உடல் நலனில் கவனம் செலுத்துங்கள்.
ஆண்டின் பிற்பகுதியில் உங்களுடைய வாழ்க்கை துணை மூலம் புதிய வருமானம் கிடைக்கும். வீடு அல்லது மனை வாங்குபவர்கள் அவற்றில் சட்டபூர்வமான சிக்கல் உள்ளதா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். ஆண்டின் பிற்பகுதியில் கடன் வாங்குவது மற்றும் கொடுப்பது ஆகியவற்றை தவிர்ப்பதே நல்லது.
தொழில், உத்தியோகம்
மருத்துவம், அறிவியல் ஆராய்ச்சி, கல்வித்துறை ஆகிய துறைகளில் நல்ல வளர்ச்சி உண்டு. கூட்டுத் தொழிலில் ஈடுபட திட்டமிட்டவர்கள் ஜூன் மாதத்திற்கு முன்பாகவே அதை செயல்படுத்த வேண்டும். அதன் பிறகு வழக்கமான பணிகளை மட்டுமே கவனித்து வருவது நல்லது. கடன் பெற வேண்டும் என்றால் அதை அளவோடு பெறவும்.
உத்தியோகஸ்தர்களை பொறுத்தவரை கல்வி, நிதி, பன்னாட்டு நிறுவனங்கள், ஆலோசனை ஆகிய துறைகளில் உள்ளவர்களுக்கு நல்ல வளர்ச்சி உண்டு. தலைமை பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு நிர்வாகத்தின் பாராட்டு கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும்.
கலை, கல்வி
சினிமா, தொலைக்காட்சி, கலை மற்றும் ஊடக துறையினருக்கு பயணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். புதிய கலை படைப்புகள் மூலம் உங்களுடைய புகழ் உயரும். ஒரு சிலர் சமூக ஊடகங்களில் பெயர் பெறுவார்கள். கலைத்துறையினர் ஒப்பந்தங்கள் செய்யும் பொழுது அதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு பிரயாணங்கள் உண்டு.
வெளிநாட்டு மொழிகள், ஆராய்ச்சி, தத்துவம், மருத்துவம் மாணவர்களுக்கு இந்த ஆண்டு பல நன்மைகளை கொண்டு வரும். கல்லூரி படிப்பின் பொழுதே மாணவர்கள் பகுதிநேர வேலை பார்த்து செலவுகளை சமாளிக்க வேண்டியதாக இருக்கும். கல்வியில் ஊக்கம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கூடுதல் நன்மை பெற..
சனியின் சஞ்சாரம் காரணமாக கல்லீரல், வயிற்று கோளாறு, மனச்சோர்வு, மன அழுத்தம், உடல் வலி ஆகியவை ஏற்படும். ஒரு சிலருக்கு பைல்ஸ் தொந்தரவுகள் ஏற்படும். மின்சாரம் மற்றும் இயந்திர பணியில் ஈடுபடுபவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். ஓய்வும் உறக்கமும் தான் இவற்றுக்கு நல்ல மருந்து.
உங்களால் இயன்றவரை குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு மஞ்சள் நிற ஆடைகளை, உணவை தானமாக வழங்கலாம். பிரதோஷ காலங்களில் நந்திக்கு அருகம்புல் சமர்ப்பணம் செய்வது, சிவபெருமானுக்கு மஞ்சள் அல்லது சந்தனம் சமர்ப்பித்து வழிபடுவது ஆகியவை நல்ல பலன்களை தரும். மாதம் ஒரு முறை குலதெய்வத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் செய்வதும் பல நன்மைகளை ஏற்படுத்தும். எந்த ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்னதாக பெற்றோர், பெரியோர்களிடம் ஆலோசனை, ஆசி பெறுவது நல்லது.
கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்






