ராகு-கேது பெயர்ச்சி.. நற்பலன்கள் அதிகம் பெறும் 3 ராசிக்காரர்கள்

ராகு கேது பெயர்ச்சியைத் தொடர்ந்து நாக கிரகங்களால் யோகங்களை வரவழைத்துக் கொள்ள, நாக தலங்களுக்குச் சென்று வழிபடலாம்.
விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 13-ந் தேதி (26.4.2025) மாலை 4.28 மணிக்கு, பூரட்டாதி நட்சத்திரம் 3-ம் பாதத்தில் கும்ப ராசிக்கு ராகுவும், உத்திரம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள். ராகுவும், கேதுவும், மற்ற கிரகங்களைப் போல முன்னோக்கிச் செல்வதில்லை, பின்னோக்கிச் செல்கின்றன. ஆனால் இந்த கிரகங்கள்தான் வாழ்வில் நாம் முன்னோக்கிச் செல்ல வழிகாட்டுகின்றன என்பதை அனுபவத்தில் உணரலாம்.
இப்பொழுது நடைபெறும் இந்த ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக மேஷம், கன்னி, தனுசு ஆகிய ராசிக்காரர்கள் மிகுந்த நற்பலன்களைப் பெறுவர்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களைப் பொருத்தவரை, அவர்களின் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு ராகு வரும்பொழுது, பொருளாதாரம் மேம்படும். தொழில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வாடகை கட்டிடத்தில் நடைபெற்று வரும் தொழிலை, சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சிக்கு, ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தானாக வந்துசேரும். பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். இதுதவிர ராகு, கேதுவின் சஞ்சாரத்தைப் பொருத்து எண்ணற்ற நன்மைகளையும் பெறுவதற்கான யோகம் உள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களின் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், 26.4.2025 அன்று 6-ம் இடத்திற்கு வருகிறார். இதனால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 6-ல் ராகு இருந்து குருகேந்திரத்தில் இருந்தால் 'அஷ்ட லட்சுமி யோகம்' உருவாகும். அந்தயோகம் குருப்பெயர்ச்சிக்கு பின்னால் செயல்படும். அதே நேரம் கேது பகவான் கன்னி ராசிக்கு 12- இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். எனவே விரயங்கள் கூடுதலாக இருக்கும். அதை சுப விரயமாக மாற்றிக்கொள்வது நல்லது. ராகு, கேதுவின் சஞ்சாரத்திற்கு ஏற்ப பொருளாதார நிலை உள்ளிட்ட அற்புதமான பலன்கள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியைப் பொருத்தவரை அந்த ராசிக்கு 4-ம் இடத்தில் அர்த்தாஷ்டம ராகுவாக சஞ்சரித்து வந்த ராகு பகவான், வெற்றிகள் ஸ்தானம் எனப்படும் 3-ம் இடத்திற்கு வரப்போகிறார். அதே சமயம் கேது பகவான் தனுசு ராசிக்கு 9-ம் இடமான பிதுராஜ்ஜித ஸ்தானத்திற்கு வருகிறார். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அதே இடத்தில் ராகுவும், கேதுவும் சஞ்சரித்து பலன்களை வழங்க உள்ளார். குறிப்பாக ராகு பகவான் முன்னேற்றத்தை வாரி வழங்க உள்ளார். இந்த ராகு- கேது பெயர்ச்சியின் பொழுதே அர்த்தாஷ்டம ராகு விலகுவதால் நன்மை ஏற்படும். எனினும், ஆயுள்காரகன் சனியோடு இணைந்து கேதுவின் பார்வை பெறுவதால் ஆரோக்கிய தொல்லை அதிகரிக்கும். சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கவனம் தேவை
மற்ற ராசிக்காரர்கள் ராகு-கேதுக்களுக்குரிய சிறப்பு வழிபாட்டையும் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளையும் தேர்ந்தெடுத்து செய்தால் சந்தோஷத்தை நாளும் சந்திக்கலாம். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். அப்பொழுது அதன் சார பலத்திற்கேற்ப அந்த ராசிக்காரர்களுக்குரிய பலன்கள் வந்துசேரும். கடகத்திற்கு அஷ்டமத்து ராகு, கும்பத்திற்கு ஜென்ம ராகு, மகரத்திற்கு அஷ்டமத்து கேது, சிம்மத்திற்கு ஜென்ம கேது என்பதால் மிக கவனத்தோடு செயல்பட வேண்டும். இந்த ராசிக்காரர்கள் நாக சாந்தி செய்துகொள்வது நல்லது.
11.5.2025 அன்று குரு பகவான், மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிச் செல்கிறார். அப்பொழுது குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ஆகிய இடங்களில் பதிகின்றது. அதன் பிறகு 8.10.2025 அன்று கடகத்திற்கு செல்லும் குரு உச்சம் பெற்று, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளைப் பார்க்கிறார். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப, நல்ல பலன்கள் இல்லம் தேடி வரும். தொட்ட காரியங்களில் வெற்றி ஏற்படும். வருமானம் உயரும்.
6.3.2026 அன்று சனி பகவான் பெயர்ச்சியாகி மீனத்திற்கு செல்கிறார். இதன் விளைவாக மேஷத்திற்கு ஏழரைச் சனியும், சிம்மத்திற்கு அஷ்டமத்துச் சனியும் தொடங்குகிறது. விருச்சிகத்திற்கு அர்த்தாஷ்டமச் சனியும், கடகத்திற்கு அஷ்டமத்துச் சனியும் விலகுகிறது. இந்தக் கிரகப் பெயர்ச்சிகளை அடிப்படையாக வைத்து ராகு-கேதுக்களுக்குரிய பலன் எழுதப்பட்டுள்ளது.
வழிபாடு
சுமார் ஒன்றரை ஆண்டு காலம் நாக கிரகங்களால் யோகங்களை வரவழைத்துக் கொள்ள நாக தலங்களுக்குச் சென்று வழிபட்டு வரலாம்.
சுய ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 6, 8, 12 ஆகிய இடங்களில், ராகு- கேதுக்கள் இருந்தால் திருமண வாழ்க்கை தடைப்படும். புத்திரப் பேறில் தாமதம் உண்டாகும். அப்படிப்பட்டவர்கள் தங்கள் சுய ஜாதகத்தில் பாதசார பலமறிந்து, நவாம்சத்தில் ராகு-கேதுக்களின் நிலையறிந்து யோகபலம் பெற்ற நாளில், ஜாதகத்திற்கு அனுகூலம் தரும் சர்ப்ப தலங்களுக்குச் சென்று வழிபடலாம். அதன் மூலம் தடைக் கற்கள் படிக்கற்களாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.