மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிகாட்டும் கிரக ஓரைகள்

சூரியன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்களின் ஓரைகளில் எந்த சுபகாரியங்களும் செய்யக் கூடாது என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய நேரத்தைக் குறிக்கும் காலமே ஓரை எனப்படுகிறது. நவக்கிரகங்களில் ராகுவும் கேதுவும் நீங்கலாக மற்ற ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை நேரம் பார்க்கப்படுகிறது. கிரகங்கள் நாள்தோறும் இரண்டரை நாழிகை அதாவது ஒரு மணி நேரம் ஒவ்வொரு ராசியிலும் தங்கி வலம் வரும். இதை அடிப்படையாகக் கொண்டு ஓரை நேரம் (ஹோரை நேரம்) கணிக்கப்படுகிறது.
காலையில் சூரியன் உதயமாகும்போது அன்றைய தினத்தின் கிழமையே முதல் ஓரையாக துவங்கும். உதாரணத்துக்கு அன்று ஞாயிற்றுக்கிழமை என்றால், அன்று காலை மணி 6 முதல் 7 வரை (சூரிய உதயம் காலை 6 மணி என்ற கணக்கின்படி) சூரிய ஓரை ஆகும். சூரிய ஓரை முடிந்து... சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என முடிந்து மீண்டும் சூரியனில் இருந்து துவங்கும். திங்கட்கிழமையாக இருந்தால் காலை 6 முதல் 7 மணி வரை சந்திர ஓரை என ஆரம்பமாகும்.
இந்த ஓரைகள் சுப ஓரைகள் அசுப ஓரைகள் என இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளன. சந்திரன், புதன், சுக்கிரன், குரு ஆகியவை சுப ஓரைகள். சூரியன், செவ்வாய், சனி ஆகியவை அசுப ஓரைகள். இவற்றுக்கென தனித்தனியாக பலாபலன்கள் சொல்லப்பட்டுள்ளன. குறிப்பாக அசுப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்களின் ஓரைகளில் எந்த சுபகாரியங்களும் செய்யக் கூடாது என்று ஜோதிட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவான பலன்கள்
சூரியன்: புதிதாக வேலையில் சேர்தல், பத்திரங்கள் மற்றும் உயில் எழுதுதல் போன்றவற்றை சூரிய ஓரையில் செய்யலாம். ஆனால் இந்த ஓரையில் பயணம் தொடங்குதல், புதுவீடு குடிபுகுதல் கூடாது. இந்த ஓரையில் துன்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாகன விபத்துகள், காயங்கள் ஏற்படலாம் என்பதால் இந்த பலன் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஓரையின் போது நற்காரியங்களை தவிர்க்க வேண்டும்.
சந்திரன்: வியாபாரம் துவங்குதல், யாத்திரை செல்லுதல், வெளிநாடு புறப்படுதல் ஆகியவற்றை இந்த ஓரையில் மேற்கொள்ளலாம். தேய்பிறை நாட்களில் இந்த ஓரையில் சுப காரியங்களை விலக்குவது நல்லது.
செவ்வாய்: மருத்துவமனைப் பணிகள், அறுவை சிகிச்சை, மருந்து அருந்துதல் ஆகியவற்றுக்கு உகந்த ஓரை இது. ஆனால் செவ்வாய் ஓரையில் சுபகாரியங்களைத் தவிர்க்கவேண்டும்.
புதன்: வழக்கு தொடர்பாக வழக்கறிஞரை அணுகுதல், ஜாதகம் பார்த்தல், புதுக்கணக்கு தொடங்குதல், நிலம் வாங்குதல் ஆகியவற்றுக்கு உகந்த நேரம்.
குரு: இந்த ஓரையில் எடுத்த காரியங்கள் அனைத்தும் நன்மை பயக்கும். இந்த ஓரை வேளையில் முகூர்த்தம் அமைவது உத்தமம். ஆடை- ஆபரணங்கள் வாங்குதல், திருமாங்கல்யத்துக்கு பொன் வாங்க, நகைக் கடை துவக்க, பெரிய தொழில்கள் செய்ய உகந்த ஓரை இது.
சுக்கிரன்: திருமணம் சம்பந்தமான செயல்கள் தொடங்குதல், ஆடை- ஆபரணம் அணிதல், அழகு பொருட்கள், ஆடை வியாபாரம் தொடங்குதல், சுப நிகழ்ச்சிகள், விருந்து அளித்தல், புதிய வாகனங்கள் வாங்குதல் ஆகியவற்றுக்கு உகந்தது.
சனி: நிலம், வீடு- மனை வாங்க விற்க முயற்சிக்கலாம். இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்குவதும் நலம் சேர்க்கும். ஆனால், இந்த ஓரையில் பயணம் செய்வதையும், மருத்துவமனைக்கு செல்வதையும் தவிர்ப்பது நல்லது.
சுப ஓரையில் அஷ்டமி, நவமி, மரண யோகம், பிரபாலாரிஷ்ட யோகம் ஆகியற்றைப் பார்க்க தேவையில்லை.
இந்த கிரக ஓரைகள் மற்றும் அவற்றுக்கான பொதுவான பலன்கள், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ளன. அதேசமயம், ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் கிரக நிலைகள் மற்றும் சேர்க்கைகள் மாறுபடும். எனவே, கிரக நிலை, மற்ற கிரகங்களின் சேர்க்கை, பார்வை, சாரம் மற்றும் நட்சத்திரங்கள் ஆகியவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப தனித்துவமான பலன்களை ஜோதிடர் மூலமாக அறிந்துகொண்டு அதன்படி செயல்படலாம்.