கும்பம்: புத்தாண்டு ராசிபலன் 2026: தனயோகத்தை தரும் குரு.. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்..!


கும்பம்: புத்தாண்டு ராசிபலன் 2026: தனயோகத்தை தரும் குரு.. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்..!
x

தனித்திறன்களை வளர்த்துக் கொண்டு உங்களுக்கென ஒரு தனிப்பட்ட இடத்தை இந்த ஆண்டு உருவாக்கிக் கொள்ள முடியும்.

கும்பம்

குரு பார்வை..

கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பொன்னான வாய்ப்புகளை எதிர்கால நலனுக்காக பயன்படுத்திக் கொள்ளும் ஆண்டாக 2026 பிறக்கிறது. அதற்கு ஏற்ப லாப ஸ்தானத்தில் நான்கு கிரகங்களின் சேர்க்கை, குரு பார்வையுடன் அமைந்துள்ளது. ஏழரை சனி காலம் இன்னும் முடியவில்லை. 5-ம் இடத்தில் அமர்ந்த குரு, ஆண்டின் பிற்பகுதியில் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் உச்ச பலம் பெற்று அமர இருக்கிறார். அவருடைய பார்வை பலத்தால் தனயோகத்தை ஏற்படுத்த இருக்கிறார்.

அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கும். நீங்கள் நல்லதை சொன்னாலும் கூட அது தவறாக எடுத்துக் கொள்ளப்படும். அதனால் முடிந்த வரை மௌனமாக இருப்பது நல்லது. வருடத்தின் பிற்பகுதியில் உங்களுக்கான சந்தர்ப்பம் அமையும். எந்த ஒரு பிரச்சினையும் உங்கள் அமைதியை பாதிக்காத வகையில் நடந்து கொள்ளுங்கள்.

குடும்பம், நிதிநிலை

சனியின் சஞ்சாரம் காரணமாக குடும்பத்தில் சில வாக்குவாதங்கள் ஏற்பட்டு சரி செய்யப்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கு எந்த தடையும் இல்லை. பண விஷயத்தில் வாழ்க்கை துணையோடு எந்த விதமான கருத்து வேறுபாடுகளும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். சொத்து சம்பந்தமான சட்ட பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக அதை சீர் செய்யுங்கள். உங்களுடைய தனித் திறன்களை வெளிப்படுத்தும் ஆண்டு இது.

நிதி நிலையை பொறுத்த வரை எதிர்வாராத பண வரவுகள் இந்த ஆண்டு உண்டு. பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். புதிய கடன்களை அளவோடு பெற்று பயன்படுத்திக் கொள்ளவும். முடிந்தவரை நீண்ட கால சேமிப்பு திட்டங்களில் முதலீடுகளை செய்வது நல்லது. பங்கு வர்த்தகத்தில் அதிகப்படியான முதலீடுகளை செய்வதை தவிர்க்கவும்.

தொழில், உத்தியோகம்

தொழில் துறையைப் பொறுத்தவரை கம்ப்யூட்டர் மென்பொருள், மக்கள் தொடர்பு, மருத்துவம், வெளிநாட்டு தொடர்பு ஆகிய துறைகளில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதுமையான விஷயங்களை செயல்படுத்தி வெற்றி பெறலாம். உங்கள் தனித்திறன்களை வளர்த்துக் கொண்டு உங்களுக்கென ஒரு தனிப்பட்ட இடத்தை இந்த ஆண்டு உருவாக்கிக் கொள்ள முடியும்.

வங்கித்துறை, கல்வி, மருத்துவம் மற்றும் அரசு பணிகளில் உள்ளவர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று செயல்பட வேண்டும். பணியிடங்களில் கண்டிப்பாக சக ஊழியர்களுடன் எந்தவிதமான வாக்குவாதங்களிலும் ஈடுபட வேண்டாம். பணி நேரம் அதிகரித்தாலும் அவற்றை அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். அதன் மூலம் நன்மை ஏற்படும். எந்த விஷயத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தவும்.

கலை, கல்வி

இசைத்துறை, சினிமா, தொலைக்காட்சி, ஊடகம் ஆகிய துறையினர் தொழில் சார்ந்த அங்கீகாரம் பெறக்கூடிய காலகட்டம் இது. உங்களுடைய திறமைகளை திட்டமிட்டு வெளிப்படுத்துவதன் மூலம் நீங்கள் யார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். மற்றவர்கள் கூறும் விமர்சனங்களை மனதில் கொள்ள வேண்டிய அவசியமில்லை. வெளி மாநிலங்களில் உங்கள் புகழ் பரவுவதற்கான சூழ்நிலை உருவாகும்.

கணிதம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறை மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெறுவார்கள். போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு தங்கள் அன்னையின் ஆசிகளை பெற வேண்டும். வேலை தேடுபவர்கள் மஞ்சள் நிற ஆடைகள் அல்லது கைக்குட்டைகளை பயன்படுத்துவது அதிர்ஷ்டம் தரும்.

நன்மைகள் நாடி வர..

நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட்டு வைத்தியம் மூலம் விலகும். சரியான நேரத்திற்கு உணவு உண்பதையும், உறங்குவதையும் மேற்கொள்ள வேண்டும். அடிவயிற்றில் வலி, மன அழுத்தம் ஆகியவை ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். நீண்ட கால நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் போதிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரவாணிகள் ஆகியோருக்கு உணவு மற்றும் பணம் தானமாக தருவது நன்மை ஏற்படுத்தும். அருகில் உள்ள கோவிலில் கருவறையில் தீபம் ஏற்றுவதற்கு நல்லெண்ணெய் தானமாக வழங்கி வரவும். இதுவரை போகாத கோவிலுக்கு சென்று அங்குள்ள மூலவருக்கு மஞ்சள் நிற மாலைகளை சமர்ப்பித்து, வணங்கி வழிபடுவது நல்லது. அருகிலுள்ள கோவிலில் உங்களால் முடிந்த சிறிய திருப்பணிகளை வாரம் ஒரு முறை செய்து வந்தால் பல சிக்கல்கள் அகலும்.

கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்

1 More update

Next Story