2026 ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள்: புதிய வேகமெடுக்க உள்ள இந்திய பங்குச் சந்தை..!

ஐ.நா. சபை உள்ளிட்ட உலக மன்றங்களில் இந்தியா முன்னணி வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026-ம் ஆங்கிலப் புத்தாண்டு
நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம், தட்சிணாயன புண்ணிய காலம், ஹேமந்த ருது, மார்கழி மாதம் 16-ம் நாள் நள்ளிரவு, (17-ம் நாள் முன்னிரவு), வியாழக்கிழமை நள்ளிரவு, வளர்பிறை துவாதசி திதி, கார்த்திகை நட்சத்திரம், சுபம் நித்திய யோகம், பாலவம் கரணம், கன்னி லக்னம், ரிஷபம் ராசி, அமிர்த யோகத்தில் லக்னாதிபதி புதன், திக் பலம் பெற்ற பாக்கியாதிபதி சுக்கிரன் ஆகியோர் குரு பார்வையிலும், சந்திரன், சனி, ராகு ஆகிய கிரகங்கள் புஷ்கராம்சத்தில் கூடிய சுப தினத்தில் நள்ளிரவு 12.01 மணிக்கு 2026-ம் ஆங்கிலப் புத்தாண்டு மங்களகரமாக பிறக்கிறது.
இந்தியாவின் புகழ் அதிகரிக்கும்
அதன்படியும், லக்ன, சதுர்த்த, சப்தம, தசம கேந்திராதிபதிகள், கேந்திரங்களில் (4-7) அமர்ந்து பரிவர்த்தனை பெற்ற கிரக அமைப்பின்படியும் இந்தியா பெரும் முன்னேற்றங்களை இந்த புத்தாண்டில் சந்திக்க இருக்கிறது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உலகளாவிய ஆதிக்கம் ஆகியவற்றில் இந்தியாவின் புகழ் அதிகரிக்கும். சர்வதேச அரசியல் அரங்கில் இந்தியாவின் குரல் வலுப்பெறும். ஐ.நா. சபை உள்ளிட்ட உலக மன்றங்களில் இந்தியா முன்னணி வகிக்கும்.
பங்குச் சந்தை
உச்ச குருவின் சஞ்சாரம் காரணமாக 2026 ஜூன் மாதத்திற்கு பிறகு பங்குச் சந்தை புதிய வேகம் பெறும். அக்டோபர் மாதம் முதல் முதலீட்டாளர்கள் நல்ல லாபம் பெறுவர். அந்நிய செலாவணி மற்றும் ரூபாய் மதிப்பு உயரும். வெளிநாட்டு கடன் சுமை படிப்படியாக குறையும். நாட்டின் ஏற்றுமதி, அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கும்.
புதிய கண்டுபிடிப்புகள்
கிரகங்களின் கூட்டுச்சேர்க்கை, முக்கியமான விண்வெளி திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும் என தெரிவிக்கிறது. மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து வலுவாக இருக்கும். உலகளாவிய செயற்கை நுண்ணறிவு துறையில், இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் கணினி நிபுணர்கள் பங்களிப்பு அதிகமாகும். எல்லைப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு சார்ந்த அச்சுறுத்தல்களை, சவால்களை இந்தியா ராஜதந்திரத்துடன் கையாளும்.
குருவின் சஞ்சாரம் காரணமாக தேசிய அளவில் கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவுகளில் புதிய கண்டுபிடிப்புகள் பல மாற்றங்களை உருவாக்கும். புதிய தொழில் துறைகளில் நிறைய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். சனி, சூரியன், செவ்வாய் சஞ்சாரம் காரணமாக ஆட்சி மறுசீரமைப்பு செய்யும் முக்கியமான சட்டம் அல்லது கொள்கை சீர்திருத்தம் அமல் செய்யப்படலாம்.
கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்






