திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரத பூஜை ஏற்பாடுகள்.. இணை அதிகாரி ஆய்வு

வரலட்சுமி விரத தினத்தன்று மாலை 6 மணிக்கு பத்மாவதி தாயார் தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.;

Update:2025-07-30 11:00 IST

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந்தேதி வரலட்சுமி விரத பூஜை நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக திருச்சானூரில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் இணை அதிகாரி வீரபிரம்மன் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

கூட்டத்தில் அவர் பேசுகையில், "ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் ஆஸ்தான மண்டபத்தில் வரலட்சுமி விரத பூஜை பாரம்பரிய முறைப்படி நடக்கிறது. வரலட்சுமி விரத பூஜையில் பங்கேற்கும் ஒவ்வொரு பக்தருக்கும் குங்குமம், வளையல்கள் மற்றும் பிரசாதம் வினியோகிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.

அன்று மாலை 6 மணிக்கு பத்மாவதி தாயார் தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

வரலட்சுமி விரத பூஜையையொட்டி அபிஷேகம், அபிஷேக அனந்தர தரிசனம், லட்சுமி பூஜை, கல்யாணோற்சவம், பிரேக் தரிசனம் மற்றும் ஊஞ்சல் சேவை போன்ற வழக்கமான சேவைகள் அன்றைய தினம் ரத்து செய்யப்படும்.

கோவில், ஆஸ்தான மண்டபம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளை பலவண்ண மலர்கள், மின் விளக்குகளால் சிறப்பாக அலங்கரிக்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.

கோவிலின் சுற்றுப்புறங்களிலும் அருகிலுள்ள சாலைகளிலும் தூய்மையைப் பராமரிக்க உள்ளூர் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பை வலியுறுத்தினார். போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சிக்கல்களை தவிர்க்க, காவல்துறையினருடன் ஒருங்கிணைப்பு அவசியம் என சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தினார். சரியான தரிசன வரிசைகள், பந்தல்கள், வழிகாட்டுதல் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். மேலும் தேவையான எண்ணிக்கையிலான ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும், எனக் கேட்டுக்கொண்டார்.

ஆய்வுக் கூட்டத்தில் அர்ச்சகர்கள் சீனிவாசாச்சாரியுலு, பாபுசுவாமி, மணிகண்டசுவாமி, கோவில் துணை ஹரேந்திரநாத், மின்வாரியத்துறை என்ஜினீயர் வெங்கடேஸ்வர்லு, அன்னப்பிரசாத துறை துணை அதிகாரி செல்வம், பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை அதிகாரி சுரேந்திரா மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்