மதுரை முக்தீஸ்வரர் கோவில்

மதுரை முக்தீஸ்வரர் கோவிலில் சிவனுக்கு முன்புறம் உள்ள தூணில், வீணையுடன் கூடிய தட்சிணாமுர்த்தி சிற்பம் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும்.;

Update:2025-07-29 17:36 IST

மதுரையில் உள்ள பஞ்சதலங்களில் வாயு தலமாகவும், சூரியனுடைய ஒளிக்கதிர்கள் இறைவனை பூஜிக்கும் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது முக்தீஸ்வரர் ஆலயம். 

தல புராணம்

ஒருமுறை துர்வாச முனிவர், சிவபூஜையை முடித்துவிட்டு பிரசாதமான மலர் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். இந்திரன் அந்த மலர் மாலையை தன் வாகனமான ஐராவதத்தின் (தேவலோகத்தின் வெள்ளை யானை) மீது வைத்தார். ஆனால் அந்த மாலையின் மகிமையை அறியாத ஐராவதம், தன்னுடைய தும்பிக்கையால் அந்த மலர் மாலையை கீழே வீசி காலால் மிதித்தது. இதனால் கோபம் கொண்ட துர்வாச முனிவர், தேவேந்திர பதவியை துறக்கும்படி இந்திரனுக்கும், தெய்வீக தன்மையை இழந்து காட்டு யானையாக திரியும்படி ஐராவத யானைக்கும் சாபம் கொடுத்தார்.

சாபம் பெற்ற ஐராவதம் பல நூற்றாண்டுகள் காட்டு யானையாக அலைந்து திரிந்தது. பின்பு வில்வ வனமாக இருந்த இங்கு சிவபூஜை செய்து வழிபட்டது. இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான், அதற்கு முக்தி அளித்தார்.

பிற்காலத்தில் இவ்விடத்தில் திருமலைநாயக்கரின் அண்ணனான முத்துவீரப்ப நாயக்கர் கோவில் எழுப்பினார். அவரது பெயராலேயே 'முத்தீஸ்வரர்' என்று அழைக்கப்பட்டார். மேலும் 'ஐராவதேஸ்வரர்' என்றும் 'இந்திரேஸ்வரர்' என்றும் அழைக்கப்பட்டார்.

இப்பகுதி மக்கள் சிவபதம் அடைந்தவர்களுக்காக சிவன் சன்னிதியில் 'முக்தி விளக்கு' ஏற்றி வழிபடுகின்றனர். இதன் காரணத்தினால் தற்பொழுது இத்தல இறைவன் 'முக்தீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

கோவில் அமைப்பு

கோவிலில் கொடிமரம், பலிபீடம், ரிஷபக்கொட்டில் ஆகியவை காணப்படுகின்றன. முன்மண்டபத்தை தொடர்ந்து உள் மண்டபம், கருவறை உள்ளது. கோவில் பிரகார கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி அமைந்துள்ளார். சிவனுக்கு முன்புறம் உள்ள தூணில் கையில் வீணையை ஏந்திக் கொண்டு, வீணை தட்சிணாமுர்த்தியாக இவர் வீற்றிருப்பது தனிச் சிறப்பாகும். இவரை வணங்கி வேண்டினால் கல்வி, கேள்வி மற்றும் இசை ஞானம் பெற்று சிறப்பு அடையலாம் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இறைவனின் திருநாமம் முக்தீஸ்வரர். அம்பாள் மரகதவல்லி தாயார். நாம் ஒரே இடத்தில் நின்றுகொண்டே இறைவன் மற்றும் அம்பாளின் சன்னிதிகளை தரிசிக்கலாம். கோவில் முன்புறம் உயரமான நந்தி, நடராஜர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், சுப்பிரமணியர், துர்க்கை, விநாயகர் ஆகியோரும் உள்ளனர். இங்கு நவக்கிரக சன்னிதி கிடையாது. கோவில் தூண்களில் உள்ள சிற்பங்கள் காண்பவர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன.

கோவிலில் கிழுவை, நெல்லி, மாவிலங்கை மற்றும் வில்வம் ஆகிய நான்கு வகையான மரங்கள் உள்ளன. வில்வ மரத்தடியில் சித்தி விநாயகர் சன்னிதி உள்ளது. இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும், நாம் நினைத்த காரியங்கள் வெற்றி அடையவும் இங்கு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

ஆலயத்தில் மகாசிவராத்திரி, நவராத்திரி, ஆடி, தை மாதத்தில் விளக்கு பூஜை, பிரதோஷ பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.

பெரும்பாலான சிவாலயங்களில் ஆண்டுக்கு சில விநாடி மட்டுமே சூரிய ஒளிக்கதிர்கள் சுவாமியை வழிபடுவதை பார்ப்போம். ஆனால் இந்த சிவாலயத்தில் மார்ச் 10 முதல் 21-ந் தேதி வரை, செப்டம்பர் 19 முதல் 30-ந் தேதி வரை என மொத்தம் 24 நாட்கள் தொடர்ச்சியாக சூரியக்கதிர் சுவாமியை பூஜிக்கிறது.

கோவில், காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 வரையும் பக்தர்களின் தரிசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

மதுரை நகரில் உள்ள வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது, முக்தீஸ்வரர் திருக்கோவில்.

Tags:    

மேலும் செய்திகள்