வராக நதிக்கரையில் கோவில் கொண்ட பாலசுப்பிரமணியர்
காசிக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கும் பலன்கள், பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று வழிபட்டாலும் கிடைக்கும் என்கிறார்கள்.;
தேனி மாவட்டம், பெரியகுளம் நகரில் வராக நதிக் கரையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் மூலவர் ராஜேந்திர சோழீஸ்வரர், தாயார் அறம் வளர்த்தநாயகி. இந்த கோவில் சிவாலயமாக இருந்தாலும், இங்குள்ள முருகப்பெருமான் மிகவும் பிரசித்தி பெற்றவர். இதன் காரணமாகவே இந்த ஆலயம் முருகன் பெயரில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் என்று அழைக்கப்படுகிறது.
தல வரலாறு
ஒரு சமயம் சோழ நாட்டு மன்னன் ராஜேந்திர சோழன், அகமலைக் காட்டுப் பகுதிக்குள் வேட்டையாடச் சென்றான். அப்போது அவன் எய்த அம்பு ஒன்று, குட்டிகளை ஈன்றிருந்த தாய் பன்றியின் மீது பட்டது. இதனால் வலியில் துடித்த அந்த பன்றி இறந்து போனது.
தாயை இழந்த பன்றிக் குட்டிகள், பசியால் சத்தமிட்டன. இதைக் கண்ட மன்னன், "தாய்ப் பன்றியைக் கொன்று, அதன் குட்டிகளுக்குப் பால் கிடைக்காமல் செய்து விட் டோமே” என்று மனம் வருந்தினான். அப்போது அந்தப் பன்றிக் குட்டிகளின் மேல் இரக்கம் கொண்ட முருகப்பெருமான் அவ்விடத்தில் தோன்றி, அவைகளின் பசியைப் போக்கினார்.
குட்டிகளின் மேல் இரக்கம் காட்டிய முருகப்பெருமானின் கருணையைக் கண்ட மன்னன், தாய்ப் பன்றியைக் கொன்றதால் தனக்கு ஏற்பட்ட பாவத்தைப் போக்கவும், பன்றிகளுக்கு அருளிய முருகப்பெருமானின் பெருமையை மக்களுக்கு உணர்த்தவும், அகமலையின் கீழே புதிய கோவில் ஒன்றைக் கட்டினார்.
அந்த ஆலயத்தில் சிவபெருமான், பார்வதிதேவி ஆகியோருடன் முருகப்பெருமானையும் சேர்த்து மூன்று தெய்வங்களை முதன்மை தெய்வங்களாக்கி வழிபட்டான் என்று இக்கோவில் தல வரலாறு கூறுகிறது.
கோவில் அமைப்பு
இந்தக் கோவில், சோழர் கால கட்டுமான அமைப்பைக் கொண்டிருக்கிறது. இக்கோவிலில், மூலவராக இறைவன் சிவபெருமான் லிங்க வடிவில் ராஜேந்திர சோழீஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறார். இக்கோவிலில் சிவபெருமான், பார்வதி தேவி, முருகப்பெருமான் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளியிருக்கிறார்கள். கோவில் வெளிச்சுற்றில் நடராசர், சூரியன், சந்திரன், தட்சிணாமூர்த்தி, பைரவர், ஏகாம்பரேஸ்வரர், விஷ்ணு, நவக்கிரகங்கள் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
இந்தக் கோவிலுக்கு அருகில் வராக நதி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நதியின் இரு கரையிலும், பல நூற்றாண்டுகளைக் கடந்த ஆண் மருத மரமும், பெண் மருத மரமும் இருக்கின்றன. காசிக்கு அடுத்தபடியாக இரண்டு மருத மரங்களுக்கு இடையில் நதி பாய்ந்து செல்வது இங்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் காசிக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கும் பலன்கள், இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும் கிடைக்கும் என்கிறார்கள். அருணகிரிநாதர் திருப்புகழில் இக்கோவிலை பற்றி பாடியிருக்கிறார்.
பிரார்த்தனை
திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் வராக நதியில் நீராடிவிட்டு கோவிலுக்குச் சென்று வழிபட்டால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும், குழந்தைப்பேறு கிடைக்கும் என்கின்றனர். வராக நதியின் இரு கரைகளிலும் இருக்கும் ஆண், பெண் மருத மரங்களைப் பார்த்து வழிபட்டுச் செல்லும் தம்பதியர்கள், மனம் ஒன்றுபட்டு நீண்ட ஆயுள் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். அவர்களுக்கு இடையே எவ்விதக் கருத்து வேறுபாடுகளும் ஏற்படாது என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
இந்த ஆலயத்தில் உள்ள ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி மற்றும் பாலசுப்பிரமணிய சுவாமி ஆகிய மூவரையும் வழிபடுபவர்கள், வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வளங்களும் கிடைக்கப் பெற்று, மன மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆலயத்தில் பங்குனி பிரம்மோற்சவம், சித்திரை திருவிழா, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம் ஆகிய விழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன.
கோவில், காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
தேனியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலையில் உள்ள பெரியகுளத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.