திருமுண்டீஸ்வரம் சிவலோகநாதர் கோவில்
சிவலோகநாதர் கோவிலில் எழுந்தருளி உள்ள அம்பாளை வழிபாடு செய்து வந்தால் நடனத்திலும், இசையிலும் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.;
விழுப்புரம் மாவட்டம் கிராமம் என்ற ஊரில் அமைந்துள்ளது சிவலோகநாதர் திருக்கோவில். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் 230-வது தலமாகவும், நடுநாட்டுத் தலங்களில் 19-வது தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.
சிவபெருமானின் வாசல் காவலர்களான திண்டி, முண்டி ஆகிய இருவரும் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர். முண்டி வழிபட்டதால் இத்தலம் 'முண்டீச்சுரம்' என்று அழைக்கப்பட்டது. இக்கோவிலில் திண்டி, முண்டி ஆகிய இருவருக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு
சொக்கலிங்கம் என்ற மன்னன் வேட்டையாடுவதற்காக இப்பகுதிக்கு வந்தான். அப்போது இங்கு இருந்த ஒரு குளத்தில் விசித்திரமான தாமரை மலர் இருப்பதை கண்டான். உடனே அதை பறிக்க நினைத்த மன்னன், தன் பணியாட்களை அனுப்பி அந்த மலரை பறித்து வர கட்டளையிட்டான். ஆனால் எவ்வளவு முயன்றும் அவர்களால் அந்த மலரை பறிக்க முடியவில்லை. மலர் மெதுவாக குளத்தை சுற்றிவர ஆரம்பித்தது. எனவே மன்னனே நேரில் சென்று அந்த மலர் மீது அம்புவிட்டான். இதனால் தாமரை மலரில் இருந்து ரத்தம் கசிய ஆரம்பித்து குளம் முழுவதும் செந்நிறமாக மாறியது.
இதைக் கண்டதும் மன்னன் மயங்கி விழுந்தான். அப்போது அந்த மலரின் நடுவில் லிங்கம் இருப்பதைக்கண்டு, குளத்தின் கரையிலேயே கோவில் கட்டி லிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். லிங்கத்தின்மீது மன்னன் விட்ட அம்பின் அடையாளம் இன்றும் சுவாமி மீது தழும்பாக உள்ளது. இதனால் இறைவன் 'முடீஸ்வரர்' எனப்படுகிறார். இப்பெயரே கல்வெட்டில் 'மவுலி கிராமம்' என அழைக்கப்படுகிறது. மவுலி என்றால் 'முடி' அல்லது 'கிரீடம்' என்று பொருள். காலப்போக்கில் மக்கள் மவுலி என்பதை விட்டுவிட்டு 'கிராமம்' என அழைக்கத் தொடங்கினார்கள், என்கிறது தல வரலாறு.
இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமான், வீரபாண்டியன் என்ற மன்னனுக்கு பொக்களம் (திருநீற்றுப்பை) அளித்துள்ளார். இதன் காரணமாக இங்குள்ள ஈசனுக்கு 'பொக்களம் கொடுத்த நாயனார்' என்ற பெயரும் உண்டு. இங்குள்ள இறைவன் சிவலோகநாதரை பிரம்மா, இந்திரன் ஆகியோர் வழிபட்டு சிறப்பு பெற்றுள்ளனர்.
கோவில் அமைப்பு
கோவிலில் ராஜகோபுரத்துடன் கூடிய நுழைவு வாசல் அமைந்துள்ளது. இதன் அருகே விநாயகரும், முருகப் பெருமானும் இடம் மாறிய நிலையில் அருள்பாலிக்கின்றனர். முருகப்பெருமானின் இடது கை, நவரச முத்திரையுடன் காணப்படுகிறது. சிவபெருமான், சிவலோகநாதர் என்ற திருநாமத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். தாயார் சவுந்தர்ய நாயகி தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தாயார் கானார் குழலி என்றும், செல்வாம்பிகை என்றும் வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
சிவபெருமான் சன்னிதிக்கும், அம்பாள் சன்னிதிக்கும் இடையில் முருகப்பெருமான் சோமாஸ்கந்தர் அமைப்பில் காட்சி தருகிறார். கோவில் பிரகாரத்தில் விநாயகப்பெருமான், நடராஜர், நவக்கிரகங்கள், அய்யனார், துர்க்கை ஆகியோரது சன்னிதிகள் உள்ளன. பொதுவாக தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து அருள்புரிவார். ஆனால் இந்த கோவிலில் தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தின் மீது அமர்ந்து அருள்பாலிப்பது சிறப்பு வாய்ந்ததாகும். கோவில் தல தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும், தல விருட்சமாக வன்னி மரமும் உள்ளன.
திருவிழாக்கள்
ஆலயத்தில் சித்திரை வருடப்பிறப்பு, ஆனி திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், மார்கழி மாத திருவெம்பாவை, திருவாதிரை, மகாசிவராத்திரி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
இத்தலத்தில் உள்ள அம்பாளை வழிபாடு செய்து வந்தால் நடனத்திலும், இசையிலும் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபடுகிறார்கள்.
அமைவிடம்
விழுப்புரத்தில் இருந்து திருவெண்ணெய்நல்லூர் செல்லும் சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.