ஆலங்குடி: செல்லியம்மன் கோவில் மது எடுப்பு விழா
மூன்று கிராமங்களிலிருந்து பக்தர்கள் மது எடுத்து வந்து அம்பாளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.;
ஆலங்குடி அருகே உள்ள குப்பக்குடி செல்லியம்மன் கோவிலில் ஆடி மாத மது எடுப்பு விழா கடந்த 22-ம் தேதி செல்லியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக குப்பக்குடி, பாத்தம்பட்டி மற்றும் மேலக்கோட்டை ஆகிய மூன்று கிராமங்களிலிருந்து பக்தர்கள் இன்று மது எடுத்து வந்து அம்பாளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதையொட்டி இன்று அதிகாலை மூன்று கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் செப்புக்குடம், சில்வர்குடம் ஆகியவற்றில் நவதானியங்களை இட்டு தென்னம் பாளையை செருகி வைத்தனர். வீட்டு வாசலில் பசுஞ்சாணத்தால் மெழுகி கோலம் போட்டனர். பின்னர் அதில் அலங்கரிக்கப்பட்ட மது குடங்களை வைத்து தீபம் காட்டி ஆராதனை செய்தனர்.
பின்னர் செண்டை மேளம் முழங்க குப்பக்குடி, பாத்தம்பட்டி மற்றும் மேலக்கோட்டை கிராமங்களில் இருந்து பெண்கள் மது குடங்களுடன் குலவையிட்டு, கும்மியடித்து, ஆரவாரத்துடன் புறப்பட்டனர். அனைவரும் குப்பக்குடியில் ஒன்று சேர்ந்து செல்லியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். கோவிலை அடைந்ததும் மதுக்குடங்களை சுமந்துகொண்டு கோவிலை வலம் வந்து வழிபட்டனர். அப்போது கோவில் பூசாரி தீபாராதனை காட்டினார்.
பின்னர் மது பூக்களுடன் கூடிய பாளையை கோவில் அருகில் ஓரு இடத்தில் போட்டுவிட்டு நவதானியங்களை கோவிலின் சன்னதியில் கொட்டினார்கள். அப்போது அனைவருக்கும் விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், அம்மை நோயிலிருந்து மக்களை காப்பற்ற வேண்டியும் அம்பாளுக்கு மது எடுப்பு விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.