மங்களம் முத்துமாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா.. முளைப்பாரி ஊர்வலம்
முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.;
திருவாடானை தாலுகா மங்களம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தினையத்தூர் கிராமத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம், பறவை காவடி, அக்னிச்சட்டி எடுத்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று கோவிலின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதன் பின்னர் அம்மனுக்கு பொங்கல் வைபவம், கிடா வெட்டுதல், அம்மன் வீதியுலா ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விரதம் மேற்கொண்டிருந்த பெண்கள், அம்மன் வீதி உலா நிகழ்ச்சியில் முளைப்பாரியை தலையில் சுமந்து கிராம வீதிகளில் ஊர்வலமாக சென்று கோவிலை சென்றடைந்தனர்.
முத்துமாரியம்மனுக்கு பால், பன்னீர் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றது. பெண்களின் முளை கொட்டு நிகழ்ச்சி, அம்மன் கரகம் வீதி உலா மற்றும் முத்து மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா ஆகிய நிகழ்ச்சியும் நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.