பூவரசங்குப்பம் செங்கேணி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய செங்கேணி மாரியம்மன், நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;
விழுப்புரம் அருகே உள்ள பூவரசங்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கேணி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 24-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அந்தந்த உபயதாரர்கள் சார்பில் உற்சவம் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு மலர் அலங்காரத்தில் செங்கேணி மாரியம்மன் எழுந்தருளியதும், தேர் வடம் பிடிக்கப்பட்டது. பூவரசங்குப்பம், வடவாம்பலம், பள்ளிப்பட்டு, சிறுவந்தாடு, மோட்சகுளம், சின்னமடம், பரசுரெட்டிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் தேர் இழுத்து அம்மனை வழிபட்டனர்.
தேர், கோவிலின் 4 மாட வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை சென்றடைந்தது. அதன் பிறகு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.