வற்றாத செல்வத்துக்கு வரலட்சுமி விரதம்
வரலட்சுமி விரதம் இருந்து பூஜை செய்பவர்கள் அம்பாளுக்கு நைவேத்தியமாக சுண்டல், கொழுக்கட்டை, பாயாசம், வடை, சர்க்கரை பொங்கல் போன்றவற்றை சமர்ப்பிக்கலாம்.;
ஆடி மாதத்தில் பலவிதமான சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் இருந்தாலும் வரலட்சுமி நோன்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும். வரலட்சுமி விரத நாளன்று மகாலட்சுமி பக்தர்களின் இல்லம் தேடி வருவதாக நம்பிக்கை. அன்றைய தினம் பெண்கள் விரதம் இருந்து மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்று பூஜை செய்து மகாலட்சுமியின் அருளாசிகளை பெறுவது வழக்கம்.
பூஜை செய்யும் முறை:
வரலட்சுமி நோன்பு கடைப்பிடிப்பவர்கள் கலசம் வைத்து அம்பாளை அதில் ஆவாகனம் செய்து பிரார்த்தனை செய்யலாம்.வரலட்சுமி நோன்பு அன்று கலசம் வைக்காதவர்கள் அம்பாளின் திருவுருவப்படத்தை மட்டும் வைத்து வழிபடலாம். மகாலட்சுமியின் திருவுருவ படத்திற்கு நல்ல வாசனையான மலர்களை வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு வீட்டு வாசலில் இருந்து அம்பாளின் திருவுருவப்படத்தை வீட்டிற்குள் எடுத்துச் செல்ல வேண்டும். அதன் பிறகு பூஜைகளை செய்ய வேண்டும்.
கலசம் வைத்து பூஜை செய்பவர்கள் இரண்டு வகைகளாக கலசங்களை வைத்துக் கொள்ளலாம். தண்ணீர் வைத்து கலசம் வைப்பவர்களும் உண்டு அல்லது அரிசி வைத்து கலசம் வைப்பவர்களும் உண்டு. இதில் அநேகமானவர்கள் அரிசி வைத்து அதன் மேல் கலசம் வைப்பவர்கள் தான் அதிகம். எவர்சில்வர் கலசம் வைக்கக்கூடாது. வெள்ளியில் வைக்கலாம். பித்தளையிலும் வைக்கலாம் அல்லது மண்கலசம் கூட வைக்கலாம்.
இப்படி கலசம் அமைத்த பிறகு கலசத்திற்கு மேல் மஞ்சள் தடவிய நூலினை சுற்றிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கலசத்திற்குள் முக்கால் பாகம் பச்சரிசியை கொட்ட வேண்டும். அதன் பிறகு அதில் மஞ்சள், குங்குமம், எலுமிச்சை பழம், காதோல கருகுமணி, கிராம்பு, ஜாதிக்காய், ஏலக்காய், மாசிக்காய், நாணயங்கள் போடவேண்டும். தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் இருந்தால் அதனை கலசத்தில் தாராளமாக போடலாம்.
அதன் பிறகு தேங்காயில் சந்தனமும் மஞ்சளும் கலந்து தடவி கலசத்திற்கு மேல் மாவிலை கொத்து வைத்து இந்த தேங்காயை வைக்கலாம்.
அம்பாளின் திரு உருவம் வைத்திருப்பவர்கள் தாராளமாக இதற்கு மேல் வைக்கலாம் இல்லை எனில் தேங்காயோடு நிறுத்திக் கொள்வது சிறப்பு. அதன் பிறகு கலசத்திற்கு பாவாடை சுற்றி அம்பாளை அதில் அமர்த்தி வழிபாடு மேற்கொள்ளலாம். அம்பாளுக்கு தீபாராதனைகளை செய்யலாம். அதன் பிறகு அம்பாளுக்கு நைவேத்தியமாக சுண்டல், கொழுக்கட்டை, பாயாசம், வடை, சர்க்கரை பொங்கல் போன்றவைகளை வைக்கலாம். வாசனை நிறைந்த மலர்களை கொண்டு அம்பாளுக்கு அர்ச்சனை செய்வது சிறப்பு.
அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்த பிறகு லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி மற்றும் அம்பிகைக்குரிய மந்திரங்களை, போற்றிகளை பாடி வழிபடவேண்டும். சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்து, பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். மேலும், மாங்கல்ய சரடுகளை மாற்றிக் கொண்டு, வாழ்க்கைத் துணையிடம் ஆசீர்வாதம் பெறுவது மிகவும் நல்லது. அதன்பின் இருவரும் இணைந்து வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த குடும்பத்தில் செல்வ செழிப்பும் மகிழ்ச்சியும் பொங்கும்.
மகாலட்சுமி விரதத்தை சுமங்கலிப் பெண்கள் மட்டுமின்றி, திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும் கடைப்பிடிக்கலாம். வரலட்சுமி விரதத்தை தவறாது கடைப்பிடித்து வரும் வீட்டில் வறுமை, திருமணத் தடை இருக்காது, திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு ஆடி மாதத்தின் 23-ம் நாள் அதாவது 8.8.2025 அன்று வரலட்சுமி விரத நாள் ஆகும்.