அரியும் அரனும் ஒன்று என்பதை உணர்த்தும் ஆடித்தபசு

சங்கரன்கோவில் ஆலயத்தில் இந்த ஆண்டு ஆடித்தபசு விழாவின் சிகர நிகழ்வான ஆடித்தபசு காட்சி ஆகஸ்ட் 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது.;

Update:2025-07-30 15:41 IST

ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் சங்கரன்கோவில் திருத்தலத்துடன் தொடர்புடைய அற்புதமான விழா ஆடித்தபசு விழா ஆகும்.

முன்பொரு காலத்தில் சங்கன், பதுமன் என்று இரு நாகலோக அரசர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு இடையே அனைத்து விஷயங்களும் ஒத்துப்போனாலும், தெய்வ வழிபாட்டில் மட்டும் ஒரு போட்டி இருந்தது. சங்கன் சிவபெருமான் மீது தீராத பக்தி கொண்டவன். அதனால், தான் வணங்கும் சிவனே, அனைத்து தெய்வங்களையும் விட உயர்வான தெய்வம் என்றான். பதுமனோ, இல்லவே இல்லை தான் வணங்கும் நாராயணன் தான் அனைவரையும் விட உயர்வான தெய்வம், அவர்தான் காக்கும் கடவுள் என வாதித்தான்.

இவர்கள் இருவரும் இந்த பிரச்சினைக்கு முடிவு காண்பதற்காக பார்வதி தேவியிடம் சென்று கேட்டனர். இவர்களின் பிரச்சினையை கேட்டு பார்வதி தேவி, கணவர் சிவனுக்கு சாதகமாக சொல்வதா அல்லது சகோதரர் திருமாலுக்கு சாதகமாக சொல்வதாக என்று யோசித்தார். சிவன், விஷ்ணு இருவருமே ஒருவர் தான். உருவத்தில் தான் இருவருக்கும் வேற்றுமையை தவிர அருள் புரியும் தன்மை ஒன்றுதான் என்றாள் பார்வதி.

இதை ஏற்க மறுத்த சங்கனும் பதுமனும், 'அது எப்படி இருவரும் ஒன்றாக முடியும்? அதை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?' என்று கேட்டனர். காலம் வரும்பொழுது உங்களுக்கே புரியும் என்று சொல்லிவிட்டு பார்வதி தேவி சென்று விட்டார். பிறகு இதனை சிவபெருமானிடம் தெரிவித்தாள் பார்வதி. மேலும் உலகத்தில் உள்ள அனைவரும் நீங்கள் இருவரும் ஒன்றுதான் என்பதை புரிந்துகொள்ள இருவரும் ஒரே ரூபமாக காட்சி தாருங்கள் என்று பார்வதி கேட்டாள்.

"எப்படி இருவரும் ஒரே ரூபமாக முடியும்? அப்படி காட்சி தருவது சாதாரண விஷயம் கிடையாது. எந்த உயர்வான விஷயத்தையும் பெற வேண்டும் என்றால் அதற்காக தவம் செய்ய வேண்டும். அப்போதுதான் அது மிக உயர்ந்த விஷயமாக இருக்க முடியும். புன்னை மரங்கள் நிறைந்த இடத்தில் முனிவர்கள் ரிஷிகள் உள்ளிட்ட எல்லோரும் என்னை நோக்கி தவம் செய்கிறார்கள். நீயும் அங்கு சென்று தவம் செய்தால் உரிய காலம் வரும்பொழுது உனது வேண்டுதல் நிறைவேறும்" என்றார் சிவபெருமான்.

அப்படி தவம் செய்வதற்காக அம்பிகை தேர்வு செய்த இடம்தான் "சங்கரன்கோவில்" ஸ்தலமாகும். பார்வதி தேவி தவம் செய்ய பூலோகத்திற்கு செல்கிறார் என்றதும் தேவமாதர்கள் அனைவரும் தாங்களும் உடன் வருவதாக தெரிவித்தனர். ஆனால் பார்வதி தேவி அவர்களை வரவேண்டாம் என்று கூறிவிட்டு அவர் மட்டும் தனியே சென்றார். ஆனாலும் தேவர்கள் மற்றும் முனிவர்கள் பார்வதி தேவியுடன் பசு கூட்டங்களாக மாறி வந்து அன்னை, தவம் செய்வதற்கு காவலாக இருந்தார்கள்.

புன்னைவனத்தில் ஊசி முனையில் நின்று பார்வதி தேவி கடும் தவம் செய்தார். தேவியின் தவத்திற்கு இறங்கி சிவனும் நாராயணனும் இணைந்து ஒரே ரூபமாக "சங்கரநாராயணராக" காட்சியளித்தனர். இந்தக் காட்சியை அம்பாளின் அருளால் சங்கனும், பதுமனும் தரிசித்து நற்பேறு பெற்றனர்.

ஒரு பாகத்தில் தலையில் சடாமுடி கங்கை பிறையுடன் நெற்றியில் திருநீற்று பட்டை, கழுத்தில் பாம்பு ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல், கையில் அங்குசமும் அணிந்த கோலமாகவும், மற்றொரு பாகத்தில் தலையில் கிரீடம், நெற்றியில் திருநாமம், கழுத்தில் துளசி மாலை, இடுப்பில் பட்டு பீதாம்பரம், கையில் சங்கு சக்கரம் ஏந்திய நிலையில் நாராயணரும் இணைந்து பார்வதி தேவிக்கு சங்கர நாராயணராக காட்சியளித்த திருநாள் தான் ஆடி மாத பௌர்ணமி தினமாகும். அந்த நாளையே ஆடித்தபசு நாளாக கொண்டாடுகிறோம்.

சிவபெருமான் துன்பங்களை அழிக்கும் கடவுள், நாராயணர் சகல ஐஸ்வர்யங்களையும் தந்து காக்கக்கூடிய கடவுள். அன்னை அம்பிகை எந்த குறைகள் இருந்தாலும் அவற்றை நீக்கி சுகமான வாழ்வு தரக்கூடியவர். இவர்கள் மூவருக்கும் உரிய நாளான அடித்தபசு நன்னாளில் சங்கரநாராயணர் ஆலயம் சென்று வழிபட்டு வர, சிவபெருமான், அம்பிகை மற்றும் திருமாலின் அருளாசிகள் முழுமையாக கிடைக்கப்பெறுவார்கள்.

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சங்கரநாராயணர் சன்னிதியில் காலை நடைபெறும் பூஜையில் துளசி தீர்த்தம் தருகிறார்கள். பகல், மாலை மற்றும் இரவு நேரப் பூஜைகளில் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சங்கர நாராயணருக்கு வில்வமும், துளசியும் சாத்தப்படுகிறது. இங்கு சங்கர நாராயணருக்கு அபிஷேகம் கிடையாது. ஸ்படிக லிங்கமாக வெள்ளிப் பேழையில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்குத் தான் அபிஷேகம் செய்கிறார்கள்.

இத்தலத்தில் ஆடித்தபசு விழா 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் சுவாமி, அம்பாள் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா நேற்று முன்தினம் (28.7.2025) தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்வான ஆடித்தபசு காட்சி ஆகஸ்ட் 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்