நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்- திரளான பக்தர்கள் தரிசனம்
தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிய நீலாயதாட்சியம்மன் தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.;
நாகையில் புகழ்பெற்ற காயாரோகணசுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19- ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. கோவில் பின்புறம் உள்ள புண்டரீக குளத்தில் அமைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிய நீலாயதாட்சியம்மன், தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேளதாளம் முழங்க 3 முறை தெப்பம் வலம் வந்தது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.