சாத்தூர்: நென்மேனி தூய இன்னாசியார் ஆலய தேர்பவனி

தூய இன்னாசியார் ஆலய தேர் பவனியைத் தொடர்ந்து நன்றி திருப்பலி, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.;

Update:2025-07-31 15:28 IST

சாத்தூர் அருகே கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயமான நென்மேனி புனித லொயோலா இன்னாசியார் ஆலய 136-வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை பாளையங்கோட்டை அருட்பணியாளர்கள் வினோத் பால்ராஜ் அடிகளார், அந்தோணி ராஜ் அடிகளார், சாத்தூர் இயேசுவின் திரு இருதய ஆலய பங்குத்தந்தை காந்தி அடிகளார், இறை மக்கள் முன்னிலையில் புனித இன்னாசியார் உருவம் பொறித்த கொடியினை ஏற்றி தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து திருப்பலியும் மறையுரையும் நடைபெற்றது.

திருவிழாவின் 9-ம் நாளன்று இரவு 7.00 மணிக்கு சென்னை நற்செய்தி குழுவினரின் குணமளிக்கும் நற்செய்தி பெருவிழா ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றன. இரவு 11.30 மணிக்கு விருதுநகர் மறைவட்ட அதிபர் அருள் ராயன் அடிகளார் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்களும், புனித இன்னாசியார் பக்தர்களும் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து திருவிழாவின் 10-ம் நாளான இன்று அதிகாலை 3.00 மணிக்கு புனித அமலோற்பவ அன்னை திரு உருவம், புனித இன்னாசியார் திரு உருவம் வண்ண மின் விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட மின் அலங்கார தேரில் எழுந்தருள செய்யப்பட்டது. பின்னர் தேர் பவனி நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர், நாகலாபுரம் சாலை, பள்ளிவாசல் தெரு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வழியாக மீண்டும் ஆலயத்தினை வந்தடைந்தது.

தேர்பவனியில் திரளான கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், இந்து, இஸ்லாம் மதங்களை சேர்ந்தவர்களும் ஜாதி, மத பேதமின்றி மதநல்லிணக்கத்துடன் கலந்துகொண்டனர். தொடர்ந்து காலை 11.00 மணிக்கு நன்றி திருப்பலி, நற்கருணை ஆசீர், அதனை தொடர்ந்து கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்