முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்
இறைவன் நாம் அளிக்கும் உதவியில் எத்தனை இலக்கம் இருக்கிறது என்பதைப் பார்ப்பதில்லை, எத்தனை இரக்கம் இருக்கிறது என்பதையே பார்க்கிறார்.;
ஈதல் என்பதை எல்லா மதங்களும், எல்லா ஆன்மிக தலைவர்களும் வலியுறுத்துகின்றனர். கிறிஸ்தவம் சொல்லும் ஈதலுக்கும், உலகம் சொல்லும் ஈதலுக்கும் அடிப்படையில் பல வேறுபாடுகள் உள்ளன.
'நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை' என்கிறது உலகம். ஆனால் ஆயிரம் பேருக்கு நல்லது என்றாலும், அது தவறான மன ஓட்டத்தோடு செய்தால் தவறே என்கிறது கிறிஸ்தவம். அதனால்தான், எப்படியாச்சும் அடுத்தவனுக்கு கொடு என்பதை கிறிஸ்தவம் போதிக்கவில்லை. "ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ, கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்" என மிக உயரிய சிந்தனையையே போதிக்கிறது. 'முழுதாய்க் கொடு' என்பதே இயேசுவின் போதனை, 'முடிந்ததைக் கொடு' என்பதல்ல.
ரூத் தன்னுடைய தாய்நாட்டையும், கனவுகளையும், பாதுகாப்பான வாழ்க்கையையும் விட்டு விட்டு நகோமியைப் பின்பற்றினார். அன்பு உண்மையாய் இருக்கும்போது எல்லைகள் விலகுகின்றன. வலிகள் உறவுகளுக்குப் பாலம் இடுகின்றன. அதுவே இயேசுவின் தலைமுறைப் பட்டியலில் ரூத்தை அமர வைத்தது.
பஞ்சத்தின் கோரப்பிடியில் சிக்கித்தவித்த நிலையிலும் எலியாவுக்கு முதலில் உணவு ஊட்டிய விதவைத் தாய், இழந்தும் ஈதலின் சிறந்த அடையாளம். தனக்கென என்ன இருக்கும் என அவள் யோசிக்கவில்லை. முகம் தெரியாத நபருக்காய் இருப்பதை இழக்கிறோமே என யோசிக்கவில்லை. அன்பினால் கசிந்துருகின்றாள். கடவுளின் அன்பில் இணைந்து விடுகின்றாள். 'இதயம் நிரம்பவேண்டும், கைகள் காலியாக வேண்டும்' அதுவே விண்ணகத்தின் கணக்கு.
'மக்கதோனிய திருச்சபையைப் பற்றி பவுல் பேசும்போது, தங்கள் தகுதிக்கு மீறி கொடுத்ததை மகிழ்வுடனும், நெகிழ்வுடனும் பதிவு செய்கிறார். ஏழ்மையில் மகிழ்வு கொள்வதற்கு கொடுப்பது ஒன்றே சிறந்த வழி. கொடுப்பதற்கு நம் பாக்கெட் எவ்வளவு பெரிதாய் இருக்கிறது என்பதல்ல, இதயம் எவ்வளவு பெரிதாய் இருக்கிறது என்பதே முக்கியம்.
தன்னிதம் இருந்த ஐந்து அப்பம் இரண்டு மீன்களை இழக்கத் தயாரான சிறுவன் தான், ஐயாயிரம் பேர் உண்ட வியப்பின் அற்புதத்தின் தொடக்கப் புள்ளி. நாம் நம்மை இழக்கத் தயாராகும்போது விண்ணை மகிழ வைக்கிறோம். மாபெரும் அதிசயத்தின் கதவுகளைத் திறந்து வைக்கிறோம். எதையும் இழக்காமல் கொடுக்கிறோம் எனில், எதையும் கொடுக்கவில்லை என்றே அர்த்தம்
ஏனெனில் இறைவன் அன்பில் தோய்ந்த தியாகத்தை எப்போதுமே நினைவில் கொள்கிறார். இறைவன் நாம் அளிக்கும் உதவியில் எத்தனை இலக்கம் இருக்கிறது என்பதைப் பார்ப்பதில்லை, எத்தனை இரக்கம் இருக்கிறது என்பதையே பார்க்கிறார்.
'என் கிட்டே ரொம்ப கம்மியாதானே இருக்கு, குடுத்தா அப்புறம் என்ன பண்றது' என நினைக்கும் ஒவ்வொரு சூழலிலும் இறைவனைப் போல செயல்படும் வாய்ப்பை இழந்து விடுகிறோம்.
'உனக்காய் சேமி' என்பது உலகின் பாடம், 'அயலானுக்காய் செலவழி' என்பதே இறைவனின் பாடம். 'கொடுக்கும் கரங்களே செபிக்கும் உதடுகளைவிட உன்னதமானவை'. ஏனெனில் நாம் சில்லறைகளை எண்ண அழைக்கப்பட்டவர்கள் அல்ல, சிலுவையை எண்ணிப்பார்க்க அழைக்கப்பட்டவர்கள்.
இழக்காமல் கொடுப்பது கனிகளைக் கத்தரிப்பது போல, இழந்தும் கொடுப்பது கிளைகளைக் கத்தரிப்பது போல. இழந்தும் கொடுக்கும் மனநிலையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நான் எதை இழக்கிறேன் என சிந்திக்காமல், நான் யாரை தூக்கி விடுகிறேன் என சிந்திக்க வேண்டும். நமது உதவிகளின் கனமல்ல, அதில் இருக்கும் கனிவே முக்கியம். ஏனெனில், அதுவே கிறிஸ்துவைப் பிரதிபலிக்கிறது. ஒருவரை ஒருவர் அன்பு செய்வதில்தான் இயேசுவின் அன்பு வெளிப்படுமேயன்றி, ஒதுங்கி இருப்பதில் அல்ல.
நல்ல சமாரியன், அடிபட்டவனைக் கண்டு நின்றான், உதவினான், அமைதியாய்க் கடந்து சென்றான். தன்னலமற்ற அவனது அன்பே அவனது பயணத்தை விண்ணை நோக்கி இயக்கியது.
இழந்தும் கொடுப்பது இயேசுவின் இயல்பையும், அவரது பிரதிபலன் எதிர்பாரா அன்பையும் பிரதிபலிக்கிறது. இழந்தும் கொடுப்பதே நம்மை பேராசை சிந்தனைகளில் இருந்து புறந்தள்ளுகிறது. இழந்தும் கொடுப்பதே இழக்காத பேரின்ப வாழ்வை நமக்கு விண்ணில் வழங்குகிறது. யாருக்கும் தெரியாமல் கொடுக்கின்ற தியாகத்தின் உதவிகள், உலக தொலைக்காட்சிகளில் விளம்பரமாகாது. ஆனால் விண்ணின் வரலாற்றில் மகிழ்வோடு பொறிக்கப்படும். ஏனெனில் ஒரு எளியவனுக்கு உதவும்போது, நாம் இறைவனையே வரவேற்கிறோம்.
-சேவியர், சென்னை.