ஆடி 2-வது செவ்வாய்: கன்னியாகுமரி அம்மன் கோவில்களில் தரிசனம் செய்ய குவிந்த பெண் பக்தர்கள்
அம்மன் கோவில்களில் ஏராளமான பெண் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.;
அம்மன் கோவில்களில் ஆடி மாதம் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடும் ஒன்று. சிறப்பு வழிபாடுகளில் பெண் பக்தர்கள் பெருமளவு பங்கேற்று அம்மனை தரிசனம் செய்வார்கள். திரள்வார்கள். பொங்கல் வைத்து அம்மனுக்கு நைவேத்யம் படைத்தும், சிறப்பு பூஜைகள் நடத்தியும் வழிபாடு செய்வார்கள். அவ்வகையில் இந்த ஆடி இரண்டாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், வடசேரி காமாட்சி அம்மன் கோவில், நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், தாழக்குடி ஔவையாரம்மன் கோவில், பெருமாள்புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில், கிருஷ்ணன்கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், கன்னியாகுமரி மற்றும் கொட்டாரம் பகுதிகளில் உள்ள முத்தாரம்மன் கோவில், சந்தன மாரியம்மன் கோவில் சுந்தரி அம்மன் உச்சினிமாகாளி அம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி 2-வது செவ்வாயையொட்டி இன்று சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெற்றன.
தாழக்குடியில் உள்ள ஔவையாரம்மன் கோவிலில் பெண் பக்தர்கள் கொழுக்கட்டை செய்து அம்மனுக்கு படைத்து வழிபட்டார்கள். சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.