சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடி தபசு திருவிழா தொடங்கியது
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி ஆகஸ்ட் 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது.;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடித்தபசு திருவிழா 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி, அம்பாள் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். விழாவை முன்னிட்டு கோவில் கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா இன்று கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் இன்று அதிகாலை 4.42 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற உள்ளது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி ஆகஸ்ட் 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.