ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்

தேரோட்டத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானவர்களும் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிந்துள்ளனர்.;

Update:2025-07-28 10:23 IST

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் மிக முக்கிய திருத்தலமாக இது போற்றப்படுகிறது. பட்டர்பிரான் கோதை, சூடி கொடுத்த சுடர்க்கொடி என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் ஆண்டாள் நாச்சியார், ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் ஆண்டாள்-ரெங்க மன்னார் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஆண்டாள் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட பந்தலில் தினந்தோறும் ஆன்மிக சொற்பொழிவுகள், பரதநாட்டியம், பட்டிமன்ற நிகழ்ச்சி, வில்லிசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

விழாவில் கடந்த 24-ந்தேதி அன்று 5 கருட சேவை நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சயன சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஆண்டாள், ரெங்கமன்னார் கோயிலிலிருந்து சர்வ அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர். தேரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 9.10 மணிக்கு தேரோட்ட திருவிழா நடைபெற்று வருகிறது.

தேரோட்டத்தில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். கோவிந்தா...கோபாலா என்ற பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து பக்தர்கள் இழுத்து செல்கின்றனர்.

மேலும் மாவட்ட நீதிபதி ஜெயக்குமார், கலெக்டர் சுகபுத்ரா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் அறங்காவலர்கள் மற்றும் கோவில் அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனர். தேரோட்ட திருவிழாவின்போது பக்தர்களுக்கு குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை நகராட்சி சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக நகரின் முக்கிய பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தேரோட்டத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானவர்களும் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிந்துள்ளனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் கள்ளழகர் கோவிலில் இருந்து சீர்வரிசை பொருட்கள் ஆண்டாள் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்