சீர்காழி சட்டைநாதர் கோவிலில் விநாயகர் தேரோட்டம்
தேரோட்டத்தைத் தொடர்ந்து சட்டை நாதர், திருநிலை நாயகி, விநாயகர், முருகன் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு பூஜை நடைபெற்றது.;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சட்டைநாதர் திருநிலை நாயகி அம்மனோடு அருள் பாலித்து வருகிறார். திருஞானசம்பந்தர், அஷ்ட பைரவர்கள் ஆகியோர் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் ஏராளமானோர் இந்தக் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று விநாயகர் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கீழ வீதியில் விநாயகருக்கு பல்வேறு வகையான சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் எழுந்தருளியதும், பூஜை செய்யப்பட்டு தேர் வடம் பிடிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர். தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக வந்த தேர் மீண்டும் கீழ வீதியில் நிலைக்கு வந்தது.
இதனையடுத்து சட்டை நாதர், திருநிலை நாயகி, விநாயகர், முருகன் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.