மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா தொடங்கியது

விழா நாட்களில் மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.;

Update:2025-07-27 16:19 IST

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெறும். மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஆடி முளைக் கொட்டுத் திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா ஆகியவை நடைபெறும்.

அவ்வகையில் இந்த ஆண்டின் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. விழாவையொட்டி மீனாட்சி அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. அப்போது மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்திற்கு முன்பு எழுந்தருளி காட்சி அளித்தார். கொடியேற்றம் முடிந்த பின்னர் அம்மனுக்கும், கொடிமரத்திற்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

ஆடி முளைக்கொட்டு திருவிழா 5-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

நாளை (28.7.2025) ஆடிப்பூரத்தன்று மூலவர், உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு உச்சிகால பூஜையில் ஏற்றி, இறக்குதல் வைபவம் நடைபெறுகிறது.

அடுத்த மாதம் 2- ந்தேதி இரவு வீதிஉலா முடிந்த பின் உற்சவர் சன்னதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவமும் நடைபெறும். விவசாயம் செழிக்கவும், நாடு வளம் பெறவும் வகை செய்யும் ஐதீகத்தில் அமைந்ததே ஆடி முளைக்கொட்டுத் திருவிழாவாகும். 

Tags:    

மேலும் செய்திகள்