ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் அம்பாள் தேரோட்டம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு
ராமேஸ்வரம் கோவிலில் நடைபெற்றுவரும் திருக்கல்யாண விழாவின் ஒரு பகுதியாக, நாளை மறுநாள் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும்.;
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடித் திருக்கல்யாண திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகின்றது. இன்று அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக கோவிலில் இருந்து அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கிழக்கு வாசல் முன்பு அலங்கரித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரில் எழுந்தருளினார். பின்னர், கோவில் இணை ஆணையர் செல்லத்துரை, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், உதவி ஆணையர் ரவீந்திரன், நகரசபை சேர்மன் நாசர் கான் துணை சேர்மன் பிச்சை தட்சிணாமூர்த்தி ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத் தொடங்கி வைத்தனர்.
கிழக்கு வாசல் பகுதியில் இருந்து புறப்பட்ட தேரானது வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு ரத வீதி சாலை வழியாக பகல் 12 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் யாத்திரை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.
திருவிழாவின் 10-வது நாளான நாளை (28.7.2025) ஆடிப்பூர நிகழ்ச்சி நடைபெறுகின்றது. நாளை மறுநாள் தபசு மண்டகபடியில் வைத்து சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. அதற்காக கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் காலை 10 மணிக்கு தபசு மண்டகப்படிக்கு புறப்பாடு நடைபெறும்.
இந்நிகழ்வை முன்னிட்டு காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை கோவில் நடை சாற்றப்பட்டிருக்கும் என்றும் அந்த சமயத்தில் பக்தர்கள் தீர்த்தங்களில் நீராடவும் தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், மாலை 5 மணிக்கு பிறகு கோவில் நடை திறக்கப்பட்ட பின்னர் வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 30-ஆம் தேதி அன்று இரவு 7 மணியில் இருந்து 8 மணிக்குள் சுவாமி- அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.