ஆடிப்பூர சிறப்பு வழிபாடு: அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வழங்குவது புண்ணியம்

திருமணமாகாத பெண்கள், ஆடிப்பூர நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.;

Update:2025-07-27 14:06 IST

தேவிக்குரிய திருநாள்களில் ஆடி மாத பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் 'ஆடிப் பூரம் திருநாள்' மிகவும் சிறப்பானது. பெண்கள் விரதம் இருந்து, மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட மங்கல பொருட்களை படைத்து வழிபடுவது வழக்கம். கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதுபோல, அன்னைக்கு ஆடிப்பூர நாளில் வளைகாப்பு நடத்தி அன்னையின் ஆசி வேண்டுவார்கள்.

இந்த நாளில் அம்மன் கோவில்களில், அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். அம்மனை அலங்கரிக்கப் பயன்படுத்திய வளையல்கள், தரிசிக்க வந்த பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அந்த வளையலை அணிந்தால், அம்பாள் தாய்மை கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அவ்வகையில் இந்த ஆண்டின் ஆடிப்பூரம் நாளை (28.7.2025) கொண்டாடப்படுகிறது. பூரம் நட்சத்திரம் இன்று மாலை 6.55 மணிக்கு தொடங்கி, நாளை இரவு 8 மணி வரை இருக்கிறது.

ஆடி பூரத்தன்று அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வழங்குவது மிகவும் புண்ணியம். திருமணமாகாத பெண்கள், நல்ல கணவன் துணையாக அமைய வேண்டும் என்றும், தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டால், அந்த வரத்தை ஆதிசக்தியான அன்னை அருள்வதாக நம்பிக்கை.

இந்த அற்புத திருநாளில், பலர் மஞ்சள் தாலி கட்டிக் கொள்வதும் உண்டு. ஆடிப்பூரம் அன்று ஆலயத்திற்குச் சென்று அம்மனை வழிபட இயலாதவர்கள், தங்கள் வீடுகளில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு, பட்டு வஸ்திரம், வளையல், பூக்கள் படைத்து வணங்கலாம். ஆடிப்பூரம் அன்று வைணவத் திருக்கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். ஏனெனில் இந்த நாளில்தான் மகாலட்சுமியின் அம்சமான ஆண்டாள் அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும்.

திருமணமாகாத பெண்கள், ஆடிப்பூர நாளில் விரதம் இருந்து ஆடிப்பூர நாயகியான ஆண்டாளை வணங்கினால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். நாளைய தினம் ஆடிப்பூரத்துடன் நாக சதுர்த்தியும் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்