பூச்சிஅத்திப்பேடு அங்காள ஈஸ்வரி-பெரியாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பூச்சிஅத்திப்பேடு அங்காள ஈஸ்வரி-பெரியாயி அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.;
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஅத்திப்பேடு ஊராட்சி, மகாலட்சுமி நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி மற்றும் பெரியாயி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
இதை முன்னிட்டு கடந்த 17-ம் தேதி முதல் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை மகாபூர்ணாகுதி, யாத்ராதானம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதன் பின்னர், புனித நீர் அடங்கிய கலசங்கள் மங்கள வாத்தியம் முழங்க வாணவேடிக்கையுடன் பிரகார புறப்பாடு நடைபெற்றது. காலை 10 மணிக்கு விமான கோபுரம், மூலவர், பிரகாரம் மூர்த்தி உள்ளிட்டவைகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். விழாவில் ஆன்மீகப் பெரியவர்களும், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
பின்னர், மஞ்சள், குங்குமம், வளையல், தாலிக்கயிறு, பூ, பழம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் நாகாலம்மன் திருக்கோவிலிலிருந்து இத்திருக்கோவிலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இரவு அங்காள ஈஸ்வரி அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.