முட்டப்பதி வைகுண்ட சாமி கோவிலில் திரண்ட அய்யாவழி பக்தர்கள்- கடலில் புனித நீராடி வழிபட்டனர்

ஆடி மாத 2-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அய்யாவுக்கு பணிவிடைகள் நடந்தன.;

Update:2025-07-27 12:42 IST

கடலில் புனித நீராடிய பக்தர்கள்

கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதி உள்ளது. இது அய்யா வைகுண்ட சாமியின் பஞ்சபதிகளில் ஒன்றாகும். அதுமட்டுமின்றி அய்யா வைகுண்டசாமி விஞ்சைபெற்ற இடமாகும். அப்படிப்பட்ட புகழ்பெற்று இந்த வைகுண்டசாமி பதியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடைபெறுவது வழக்கம்.

அதேபோல ஆடிமாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலை 4 மணிக்கு முட்டப்பதி அய்யா வைகுண்ட சாமி பதியில் திருநடை திறக்கப்பட்டு அய்யாவுக்கு பணிவிடைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து உகப்படிப்பு நடந்தது. பின்னர் வாகன பணிவிடையும் மதியம் உச்சிப்படிப்பும் அதைத்தொடர்ந்து நித்திய பால் தர்மமும் அன்னதானமும் நடந்தது.

இதில் கலந்துகொண்ட அய்யா வழி பக்தர்களுக்கு இனிப்பு, தேங்காய், பழம், திருநாமம், வெற்றிலை, பாக்குமற்றும் பழங்கள் உள்ளிட்டவை இனிமமாக வழங்கப்பட்டது. மாலையில் அய்யாவுக்கு பணிவிடை, வாகன பவனி அன்னதர்மம் போன்றவை நடைபெறுகிறது.

இந்த சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்பதற்காக முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் அய்யாவழி பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே முட்டப்பதியில் குவிந்தனர். அவர்கள் முட்டப்பதி தீர்த்தக்கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யா வைகுண்டசாமியை வணங்கி வழிபட்டனர்.

இதே போல முட்டப்பதியில் உள்ள அய்யா மூத்தநயினார் பதி, கன்னியாகுமரி அருகே நரியன்விளையில் உள்ள தெட்சணத்து துவாரகாவதி, ஆமணக்கன்விளை வாவைப்பதி, ரஸ்தாகாடு காயாம்பூபதி உள்பட அனைத்து அய்யா வைகுண்டசாமி பதிகளிலும் ஆடி மாத 2-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று அய்யாவுக்கு பணிவிடைகள் நடந்தன.

Tags:    

மேலும் செய்திகள்