சண்டி கருப்பசாமி கோவிலில் பக்தர்களுக்கு பிடி காசு வழங்கும் விழா
ஆடி அமாவாசையை முன்னிட்டு சண்டி கருப்பசாமி கோவிலில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.;
ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாக் கவுண்டம்பட்டியில் கொங்கலம்மன் கோவில் அருகில் பிரசித்தி பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு 33 அடி உயரத்தில் சண்டி கருப்பசாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இக்கோவில் வளாகத்தில் நாகக்கன்னி சன்னதி அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று பிடி காசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். சுவாமியிடம் சில்லரை காசுகளை வைத்து பூஜை செய்து, பக்தர்களுக்கு வழங்குவார்கள். அவ்வகையில் இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு பிடி காசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
108 மூலிகைகளைக் கொண்டு கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், நரசிம்ம ஹோமம் போன்ற சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து கருப்பசாமி வேடமணிந்து அருள்வாக்கு கூறிய கோவில் பூசாரியிடம் பக்தர்கள் பிடி காசு வாங்கிச் சென்றனர்.
இவ்வாறு சண்டி கருப்பசாமி கொடுக்கும் பிடி காசுகளை வாங்கிச் சென்றால், தொழில் மேன்மை அடையும், கடன் பிரச்சினை தீரும், குடும்பத்தில் செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.