ரூ.3 கோடி வீடு, ரூ.66 லட்சம் வங்கி இருப்பு.. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தானமாக வழங்கிய பக்தர்

உயில் எழுதி வைத்த பக்தரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், சொத்துகளின் காப்பாளர்கள் நேற்று தேவஸ்தான அதிகாரியிடம் ஆவணங்களை ஒப்படைத்தனர்.;

Update:2025-07-25 11:27 IST

ஐதராபாத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அதிகாரியான மறைந்த ஒய்.வி.எஸ்.எஸ். பாஸ்கர்ராவ் என்பவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தனது சொத்துகளை தானமாக வழங்க உயில் எழுதி வைத்திருந்தார். அந்த உயிலில் ரூ.3 கோடி மதிப்பிலான வீடு, ரூ.66 லட்சம் வங்கி இருப்பை காணிக்கையாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

அந்த வீடு ஐதராபாத் வனஸ்தலிபுரத்தில் உள்ளது. அந்த வீட்டின் பரப்பளவு 3,500 சதுர அடி ஆகும். அந்த வீட்டை ஆன்மிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும்படி உயிலில் குறிப்பிட்டுள்ளார். அவரின் வங்கி இருப்பில் இருந்த ரூ.66 லட்சத்தில் இருந்து ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்னப்பிரசாத அறக்கட்டளைக்கு ரூ.36 லட்சமும், ஸ்ரீவெங்கடேஸ்வரா சர்வ ஸ்ரேயாஸ் அறக்கட்டளை, வேதப் பரி ரக்ஷன அறக்கட்டளை, கோ சம்ரக்ஷன அறக்கட்டளை, வித்யாதான அறக்கட்டளை, ஸ்ரீவாணி அறக்கட்டளைகளுக்கு தலா ரூ.6 லட்சமும் காணிக்கையாக பகிர்ந்தளிக்கப்படுகிறது.

அந்தக் பக்தரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சொத்துகளின் காப்பாளர்களான தேவராஜ்ரெட்டி, சத்தியநாராயணா, லோகநாத் ஆகியோர் நேற்று ஏழுமலையான் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம், வீட்டின் ஆவணங்கள், ரூ.66 லட்சம் வங்கி இருப்பை தேவஸ்தானத்தின் அறக்கட்டளைக்கு பகிர்ந்து அளிப்பதற்கான காசோலைகள் மற்றும் உயில் ஆவணத்தை ஒப்படைத்தனர்.

 

இதேபோல் ஹைதராபாத்தை சேர்ந்த டிரினிட்டி கம்பைன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னபிரசாத அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி நன்கொடை வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்