திருவண்ணாமலை: கோட்டுப்பாக்கம் கிராமத்தில் குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்ட பெண்கள்

ஆடி அமாவாசை சிறப்பு வழிபாட்டின் ஒரு பகுதியாக, பக்தர்கள் பால் காவடி, சந்தன காவடி, புஷ்பக் காவடி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.;

Update:2025-07-25 11:46 IST

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே கோட்டுப்பாக்கம் கிராமத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பரதேசி ஆறுமுகசாமி குரு பூஜை விழா நடந்தது. இதை முன்னிட்டு ஆறுமுகசாமி ஜீவசமாதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கிராம தேவதை பொன்னியம்மனுக்கு பொங்கல் வைத்து, பம்பை உடுக்கையுடன் ஊர்வலமாக வந்து அருள் வாக்கு கேட்டனர். பின்னர் திருவாசகம், தமிழ் வேத பாடல்கள் முற்றோதல் நடந்தது. இதைத்தொடர்ந்து பரதேசி ஆறுமுகசாமி ஜீவசமாதிக்கு சிறப்பு பூஜை செய்து பிரசாதம் கொண்டு வந்து வைத்தனர்.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த குழந்தை இல்லாத பெண்கள் மேடை அருகே வந்து அமர்ந்தனர். அங்கு யாகம் நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் சாதுக்களிடம் பிரசாதம் பெற்றுக் கொண்டு குழந்தை வரம் வேண்டி, அருகில் உள்ள குளத்தில் படிகள் மீது மண் சோற்றை தரையில் வைத்து கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு மண்டியிட்டு சாப்பிட்டனர்.

முன்னதாக பக்தர்கள் பால் காவடி, சந்தன காவடி, புஷ்பக் காவடி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இரவில் வள்ளி, தெய்வானை, முருகர், விநாயகர், பொன்னியம்மன் ஆகிய உற்சவர்கள் சர்வ அலங்காரத்துடன வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்