ஆடிப்பூர திருவிழா: ஆண்டாள் கோவிலில் விடிய விடிய நடைபெற்ற 5 கருடசேவை
5 பெருமாள் தனித்தனி கருட வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.;
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினந்தோறும் ஆண்டாள்-ரெங்க மன்னார் வீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் ஆன்மிக சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
விழாவில் 5-ம் நாளான நேற்று (24.7.2025) 5 கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. கருட சேவை நிகழ்ச்சியில் பெரிய பெருமாள், ரெங்க மன்னார், சீனிவாச பெருமாள், காட்டழகர் சுந்தரராஜ பெருமாள், திருத்தங்கல் பெருமாள் ஆகியோர் காலை 10 மணிக்கு ஆண்டாள் கோவில் முன்புள்ள ஆடிப்பூர மண்டபத்தில் எழுந்தருளினர். அவர்களுக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
இதை தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு 5 பெருமாளும் தனித்தனியே கருட வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்தனர். பின்னர் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அன்ன வாகனத்திலும், 5 பெருமாள் கருட வாகனத்திலும் தனித்தனியே எழுந்தருளி மாடவீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 5 மணி வரை கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. 8 பஜனை குழுவினர் பஜனை பாடியபடி வந்தனர்.
மேலும் பக்தர்களுக்காக பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் அறங்காவலர்கள் மற்றும் கோவில் அதிகாரிகள் செய்திருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.